அமீலியா எக்ஸ் தளம்
கிரிக்கெட்

ஆறு மாசம்கூட ஆகல.. ஒரே ஆளுதான்.. இந்தியாவின் சாதனையை முறியடித்த நியூசி.!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியாவுக்கு ( 338) எதிராக 341 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றதுடன் உலக சாதனை படைத்திருந்தது.

Prakash J

மகளிர் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. அதிக ரன்னை சேஸ் செய்த அணி என்ற புதிய வரலாற்றுச் சாதனையை நியூசிலாந்து படைத்துள்ளது.

தென்னாப்பிரிக்கா மகளிர் அணி, நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு மகளிர் அணியுடன் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் தற்போது இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளன. முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்ற நிலையில், நேற்று இரு அணிகளும் இரண்டாவது போட்டியில் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த நியூசிலாந்து மகளிர் அணி, தென்னாப்பிரிக்காவை முதலில் பேட் செய்யப் பணித்தது. அதன்படி, கேப்டன் லாரா வால்வார்டுட் (69 ரன்கள்), அன்னேகே போஸ்க் (91 ரன்கள்), சோலே டிரயன் (52*) ஆகியோரின் அரைசதங்களால் அவ்வணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 346 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் பிரீஆர்னி லிங் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

nz

பின்னர், 347 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில், தொடக்க வீராங்கனைகள் ஏமாற்றியபோதும், கேப்டன் அமீலா கெர் நங்கூரமாய் நிற்கத் தொடங்கினார். அவருக்கு இணையாக லஜி கேஜ் துணை நின்றார்.

இருவரும் ஏதுவான பந்துகளை பவுண்டரி எல்லைக்கு அனுப்பிய நிலையில், அணியின் வெற்றிக்கும் வித்திட்டனர். இறுதியில் அந்த அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 350 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதன்மூலம், மகளிர் ஒருநாள் போட்டியில் அவ்வணி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. அதிக ரன்னை சேஸ் செய்த அணி என்ற புதிய வரலாற்றுச் சாதனையை நியூசிலாந்து படைத்துள்ளது.

india

முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியாவுக்கு ( 338) எதிராக 341 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றதுடன் உலக சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையைத்தான் தற்போது நியூசிலாந்து முறியடித்துள்ளது. இந்தப் போட்டியில் தனி ஒருவனாக நின்று போராடிய கேப்டன் அமீலா கெர், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 139 பந்துகளில் 23 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 179 ரன்கள் எடுத்தார். லஜி கேஜ் 68 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இரு அணிகளும் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளன.