இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது..
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது தென்னாப்பிரிக்கா..
இந்நிலையில் முதல் டெஸ்ட்டின் இரண்டாவது நாளில் இந்திய கேப்டன் சுப்மன் கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது.. அதனால் அவரால் இரண்டு இன்னி்ங்ஸிலும் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது.. போட்டியில் தோற்றதற்கான காரணமாக அவர் விளையாட முடியாமல் போனதும் சொல்லப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது..
இந்திய அணி ஜடேஜா, குல்தீப், அக்சர் பட்டேல், வாசிங்டன் சுந்தர் என 4 ஸ்பின்னர்களுடன் சென்றபோதும் அவர்களால் வெற்றியை ஈட்ட முடியவில்லை.. ஸ்பின்னுக்கு சாதகமான பிட்ச்சை தயார்செய்வதெல்லாம் சரி, அதற்கு முதலில் ஸ்பின்னர்களுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்களை தாக்குப்பிடிக்க சொல்லுங்கள் என நெட்டிசன்கள் விமர்சிக்கும் அளவிற்கு இந்திய அணியின் செயல்பாடு முதல் டெஸ்ட்டில் அமைந்துள்ளது..
போதாக்குறைக்கு இந்திய கேப்டன் சுப்மன் கில்லும் காயம் காரணமாக விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா தொடரையே இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது..
நவம்பர் 22-ம் தேதி குவஹாத்தியில் இரண்டாம் டெஸ்ட் நடக்கவிருக்கும் நிலையில், சுப்மன் கில் இரண்டாவது டெஸ்ட்டிலும் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி அணியில் இணைவார் என்றும், பிளேயிங் லெவனில் சாய் சுதர்சன் அல்லது தேவ்தத் படிக்கல் இணைக்கப்படுவார்கள் என சொல்லப்படுகிறது..
ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை இழந்ததே ஆறாத வடுவாக இருந்துவரும் நிலையில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராகவும் இந்தியா தோற்றால் WTC கோப்பை வெல்லும் இந்தியாவின் கனவு சொந்த மண்ணில் அடைந்த தோல்விகளாலேயே காணாமல் போய்விடும் நிலை ஏற்படும்..