NEP vs MGL
NEP vs MGL Twitter
கிரிக்கெட்

டி20 வரலாற்றில் புதிய சகாப்தம்! ஒரே போட்டியில் 6 உலக சாதனைகள் படைத்த நேபாள அணி!

Rishan Vengai

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆடவர் டி20 கிரிக்கெட் போட்டியில் நேபாளம் அணி மங்கோலியா அணியை எதிர்த்து விளையாடியது. முதலில் பேட் செய்த நேபாளம் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 314 ரன்களை குவித்தது. எட்டவே முடியாத ஒரு இமாலய இலக்கை சேஸ் செய்த மங்கோலியா அணி நேபாளத்தின் தரமான பந்துவீச்சில் 41 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வியை சந்தித்தது. 273 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளம் மாபெரும் வெற்றி பெற்று அசத்தியது.

இந்த ஒரு போட்டியின் மூலம் உடைக்கவே முடியாது என நினைத்த பல கிரிக்கெட் ஜாம்பவான்களின் உலக சாதனைகளை உடைத்து, “என்ன பா நடக்குது இங்க” என்பது போல் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் மிரட்சியில் ஆழ்த்தியுள்ளனர் நேபாள வீரர்கள்.

1. டி20 கிரிக்கெட் வரலாற்றில் 300 ரன்கள் குவித்த ஒரே அணியாக நேபாளம் மாறியுள்ளது!

குஷல் மல்லா 50 பந்துகளில் 137 ரன்கள், ரோகித் பவ்டெல் 27 பந்துகளில் 61 ரன்கள், திபேந்திர சிங் 10 பந்துகளில் 52 ரன்கள் என வானவேடிக்கை காட்டிய மூவரும் நேபாள அணியை ஒரு அரிதான உலக சாதனைக்கு அழைத்து சென்றனர். இந்த போட்டியில் 314 ரன்களை குவித்த நேபாளம், டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 300 ரன்கள் குவித்த முதல் அணி என்ற உலக சாதனையை படைத்துள்ளது.

Nepal

இதற்கு முன் 2019ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அடித்த 278 ரன்களே ஒரு டி20 இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்தது.

2. 34 பந்துகளில் சதம் விளாசிய குஷல் மல்லா!

இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய குஷல் மல்லா, 34 பந்துகளில் சதமடித்து மிரட்டி விட்டார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.

Kushal Malla

12 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளை விளாசி 34 பந்துகளில் சதமடித்த அவர், 35 பந்துகளில் சதமடித்து சாதனை செய்திருந்த ரோகித் சர்மா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார்.

3. “6, 6, 6, 6, 6, 6, 2, 6, 6” என 9 பந்தில் அரைசதம் அடித்து உலக சாதனை!

போட்டியின் 19வது ஓவரின் 2வது பந்தில் களத்திற்கு வந்த திபேந்திர சிங், அந்த ஓவரில் எதிர்கொண்ட 5 பந்துகளையும் சிக்சர்களாக பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார். பின்னர் கடைசி மற்றும் 20வது ஓவரின் 2வது பந்திற்கு ஸ்டிரைக் வந்த திபேந்திரா அடுத்த 4 பந்துகளில் 3 சிக்சர்களை பறக்கவிட்டு, 9 பந்தில் 50 ரன்களை எட்டி யாருமே படைக்காத இமாலய சாதனையை படைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

9 பந்துகளில் 8 சிக்சர்களை கிரவுண்டிற்கு வெளியே அனுப்பிய திபேந்திர, டி20 கிரிக்கெட்டில் 16 வருடங்களாக உடைக்கவே முடியாத ரெக்கார்டை வைத்திருந்த யுவராஜ் சிங்கின் 12 பந்துகளில் அரைசதம் என்ற சாதனையை முறியடித்துள்ளார்.

4. T20I கிரிக்கெட்டில் ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் - 520!

10 பந்துகளில் 8 சிக்சர்களுடன் 52 ரன்களை குவித்த திபேந்திர சிங், 520 ஸ்டிரைக்ரேட்டுடன் இதை செய்து அசத்தியுள்ளார். இதன்மூலம் ஒரு டி20 இன்னிங்ஸில் 10 பந்துகள் அல்லது அதற்கு மேற்பட்ட பந்துகளை எதிர்கொண்டு அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் ஒரே வீரர் என்ற இமாலய சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.

திபேந்திர சிங்

இந்த பட்டியலில் 10 பந்துகள் அல்லது அதற்கு மேற்பட்ட பந்துகளை எதிர்கொண்டு எந்த ஒரு வீரரும் 400க்கு மேற்பட்ட ஸ்டிரைக்ரேட் கூட வைத்திருக்கவில்லை. யாரும் நெருங்கவே முடியாத இந்த சாதனையை படைத்திருக்கும் திபேந்திராவுக்கு அடுத்த இடத்தில் வெஸ்ட் இண்டீஸின் ட்வெய்ன் ஸ்மித் 7 பந்துகளில் 29 ரன்கள் அடித்து 414 ஸ்டிரைரேட்டுடன் இருக்கிறார். இதை 2007ல் வங்கதேசத்துக்கு எதிராக அவர் அடித்திருந்தார்.

5. டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை!

மங்கோலியாவை 41 ரன்களில் சுருட்டிய நேபாளம் 273 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்து, வரலாற்றில் புதிய மைல்கல்லை எழுதியுள்ளது. ஒரு டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக மார்ஜின் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற போட்டி இதுவாகும்.

இந்த பட்டியலில் 2019-ம் ஆண்டு செக் குடியரசு துருக்கியை 257 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாக இருந்தது. தற்போது அந்த ரெக்கார்டை நேபாளம் உடைத்துள்ளது.

6. ஒரு டி20 இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிக சிக்சர்கள்!

மங்கோலியாவுக்கு எதிராக 314 ரன்களை குவித்த நேபாள அணி, இந்த ஒரு இன்னிங்ஸில் மட்டும் 26 சிக்சர்களை குவித்துள்ளது. இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்களை பதிவு செய்த அணியாக நேபாளம் மாறியுள்ளது.

NEP vs MGL

இதற்கு முன் 2019ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அடித்த 22 சிச்கர்களே ஒரு டி20 இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிக சிக்சர்களாக இருந்தது. தற்போது அந்த சாதனையையும் நேபாளம் முறியடித்துள்ளது.