இங்கிலாந்துக்கு எதிராக 4 ரன்னில் வெற்றியை நழுவவிட்ட நேபாள் web
கிரிக்கெட்

’4 ரன்னில் தவறிப்போன வரலாறு..’ ‘நாங்க வேடிக்கை பார்க்க வரல’ - நேபாள் கேப்டன் பேச்சு!

இங்கிலாந்து உடனான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்ட பிறகு நேபாள் கேப்டன் தங்கள் அணி வேடிக்கை பார்க்க உலகக்கோப்பை வரவில்லை என பேசியது..

Rishan Vengai

2026 டி20 உலகக்கோப்பை தொடரில் நேபாள அணி இங்கிலாந்துக்கு எதிராக கடைசி நேரத்தில் 4 ரன்னில் தோல்வியடைந்தது. நேபாள கேப்டன் ரோஹித் பௌடல், அணியின் முயற்சியை பாராட்டி, வெற்றிக்காகவே வந்ததாக கூறினார். இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸ், நேபாள அணியின் சிறந்த ஆட்டத்தை பாராட்டினார்.

2026 டி20 உலகக்கோப்பை தொடரானது பிப்ரவரி 7ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடக்கிறது. 20 அணிகள் ஒரு கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தவிருக்கும் நிலையில், சிறிய அணிகள் எப்படி விளையாடப்போகின்றன, எதாவது பெரிய அப்செட் நிகழுமா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

நேபாள் ரசிகர்கள்

அந்தவகையில் இன்று நடைபெற்ற நேபாள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி பரபரப்பாக நடந்துமுடிந்தது. கடைசிபந்துவரை வெற்றியின் பக்கம் இருந்த நேபாள் அணியிடமிருந்து வெற்றியை தட்டிப்பறித்தார் இங்கிலாந்து வீரர் சாம் கரன். 2 பந்துக்கு 6 ரன்கள் என இருந்தபோது 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது நேபாள அணி.

இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய நேபாள் அணி கேப்டன் ரோஹித் பௌடல், “ஏமாற்றம் இருந்தாலும், என் அணிக்காக நான் பெருமைப்படுகிறேன். நாங்கள் உலகக்கோப்பைக்கு நம்பிக்கையுடன் தான் வந்துள்ளோம், வெறுமனே பங்கேற்றுவிட்டு செல்வதற்காக இங்கு வரவில்லை” என பேசினார்.

இங்கிலாந்து அணிக்காக ஆட்டநாயகன் விருதை வென்ற வில் ஜாக்ஸ், “முழு பாராட்டும் நேபாள அணிக்கு தான் போகவேண்டும், அவர்கள் மிகச் சிறந்த கிரிக்கெட்டை விளையாடினார்கள்” என புகழ்ந்து பேசினார்.