jan nicol loftie-eaton
jan nicol loftie-eaton twitter
கிரிக்கெட்

வெறும் 33 பந்துகள் தான்! டி20இல் அதிவேக சதம்; ரோகித் சர்மாவைப் பின்னுக்குத் தள்ளிய நமீபியா வீரர்!

Prakash J

மூன்று வகையிலான கிரிக்கெட்டில், டி20 போட்டிகளே உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. காரணம், அந்தப் போட்டியில் எண்ணற்ற சாதனைகள் தகர்க்கப்பட்டும் புதிதாகப் படைக்கப்பட்டும் வருகின்றன. அந்த வகையில் நமீபியா அணியைச் சேர்ந்த வீரர் ஒருவர் 33 பந்துகளில் சதமடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

jan nicol loftie eaton

நேபாளம் மற்றும் நமீபியா ஆகிய அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இவ்வணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் போட்டியில், ஜான் நிகோல் லாஃப்டி ஈட்டான் என்ற வீரர் 33 பந்துகளில் 11 பவுண்டரி 8 சிக்ஸர்கள் மூலம் சதம் அடித்து அசத்தினார். 36 பந்துகள் சந்தித்த அவர், 101 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இந்த நமீபிய வீரர் 33 பந்துகளில் அடித்த இந்தச் சதம், அதிவேக சர்வதேச டி20 சதமாக பதிவாகி இருக்கிறது. இதற்கு முன்பாக 34 பந்துகளில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேபாள் வீரர் குசால் மல்லா சதம் அடித்திருந்தது சாதனையாக இருந்தது. குசால் மல்லா, இந்தச் சதத்தை கடந்த ஆண்டு (2023) இதே நமீபியா அணிக்கு எதிராக எடுத்திருந்தார். தற்போது அந்தச் சாதனையை, நமீபா அணி, அதே நேபாள் அணிக்கு எதிராக முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலில் தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் வங்கதேசத்திற்கு எதிராகவும், இந்திய வீரர் ரோகித் சர்மா இலங்கைக்கு எதிராகவும் கடந்த 2017ஆம் ஆண்டில் இருவரும் 35 பந்துகளில் சதம் கண்டிருந்தனர். அதேபோல் செக் குடியரசு வீரரான சுதேஷ் விக்ரமசேகரா, கடந்த 2019ஆம் ஆண்டு துருக்கிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் கண்டிருந்தார். தற்போது இந்தப் பட்டியலில்தான் நமீபியா வீரர் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

rohit sharma

பின்னர், நமீபியா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய நேபாள் அணி 186 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. 20 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியா அணி வெற்றி பெற்றது.