இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முதலில் தொடங்கப்பட்ட நிலையில், இலங்கை-வங்கதேசம் 2 அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இலங்கையில் உள்ள கலி சர்வதேச மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது.
பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் இலங்கைக்கு எதிராக வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் 45 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் தடுமாற, 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் மற்றும் முஸ்ஃபிகுர் ரஹீம் இருவரும் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி அடுத்தடுத்து சதமடித்து அசத்தினர்.
கேப்டன் ஷாண்டோ 148 ரன்கள், முஸ்ஃபிகுர் ரஹீம் 163 ரன்கள் மற்றும் லிட்டன் தாஸ் 90 ரன்களும் அடிக்க முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 495 ரன்கள் குவித்தது.
அதற்குபிறகு முதல் இன்னிங்ஸில் விளையாடிய இலங்கை அணியில், தொடக்க வீரர் பதும் நிசாங்கா 187 ரன்கள் குவிக்க 485 ரன்கள் சேர்த்தது இலங்கை.
10 ரன்கள் முன்னிலை பெற்ற வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 285/6 ரன்கள் அடித்து டிக்ளார் செய்தது. இரண்டாவது இன்னிங்ஸிலும் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய கேப்டன் ஷாண்டோ 125 ரன்கள் குவித்து நாட் அவுட்டில் முடித்தார். 296 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் அடிக்க இறுதிநாள் ஆட்டம் முடிவுக்கு வந்து போட்டி சமன் செய்யப்பட்டது.
முதல் இன்னிங்ஸ் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ் இரண்டிலும் சதமடித்த ஷாண்டோ, இச்சாதனையை படைத்த முதல் வங்கதேச கேப்டனாக வரலாற்றில் தன்பெயரை பதித்தார்.