இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் அடைந்த படுதோல்வியைத் தொடர்ந்து, முஹம்மது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக், சல்மான் அலி ஆகா, ஆமிர் ஜமால், குர்ரம் ஷாசாத், அலி உஸ்மான், முஹம்மது அவைஸ் ஜாபர் ஆகிய 7 வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அணியில் இருந்து அதிரடியாக நீக்கியது. அதேபோல், டெஸ்ட் தலைமைப் பயிற்சியாளரான சர்ஃபராஸ் அகமது, பந்துவீச்சுப் பயிற்சியாளரான உமர் குல் ஆகியோரும் நீக்கப்பட்டனர். இது, பாகிஸ்தானில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் வங்கதேச அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான முஷ்டாக் அகமது கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “எனது தாய்நாட்டிற்குச் சேவை செய்ய நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன். குறிப்பாக, இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு உதவ விரும்புகிறேன். ஆனால், நமது சொந்த நாட்டிலேயே நமக்கு உரிய மரியாதை கிடைக்காதபோது அங்கு வேலை செய்யப் பயமாக இருக்கிறது. சில உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளால், ஒரு தொடரின் நடுவிலேயே பயிற்சியாளர்களையும் வீரர்களையும் நீக்குவது கவலையளிக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் இதுபோன்று ஒரேநேரத்தில் பலரை நீக்கியது இதற்குமுன்பு நடந்ததே இல்லை. சர்பராஸ் மற்றும் உமர் குல் ஆகியோர் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்களை நீக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தால், தொடர் முடிந்த பிறகு செய்திருக்க வேண்டும். பாதியில் அவர்களை நீக்கி அவமதிப்பது தவறானது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது இந்த அவசரப் போக்கை மாற்றிக்கொண்டு, பயிற்சியாளர்களுக்கு உரிய மரியாதையும் பாதுகாப்பும் அளித்தால் மட்டுமே தன்னைப் போன்ற முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் அணிக்குச் சேவைசெய்ய முன்வருவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.