ஹர்திக், ரோகித், யுவராஜ் சிங்
ஹர்திக், ரோகித், யுவராஜ் சிங் ட்விட்டர்
கிரிக்கெட்

”ரோகித் அனுபவசாலிதான்.. ஆனாலும்” - மும்பை அணி கேப்டன் விவகாரம் குறித்து யுவராஜ் சிங் பதில்!

Prakash J

50 ஓவர் உலகக்கோப்பையைச் சொந்த மண்ணில் இந்தியா இழந்த பிறகு, அதுகுறித்து நிறைய விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. தற்போது அதிலிருந்து மீண்டுவந்து பிற அணிகளுக்கு எதிரான தொடர்களில் வெற்றிபெற்று வருகின்றன. அதிலும் நீண்ட இடைவெளிக்குப்பின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பங்குபெற்றுள்ளனர்.

rohit sharma, hardik pandya

இது, ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டிருப்பதும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து அவ்வப்போது விமர்சனங்கள் வரும்நிலையில், முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங்கும் தற்போது இதுதொடர்பாக பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “ஹர்திக் பாண்டியா அணியில் முக்கியமான வீரர். எனவே இந்தியா வெற்றிபெறுவதற்கு அவர் தேவை. அடிக்கடி காயத்தைச் சந்திக்கும் அவர், அதிலிருந்து முழுமையாகக் குணமடைவதற்குத் தேவையான நேரத்தை நாம் கொடுக்க வேண்டும். அவரைப் பயன்படுத்தி நாம் சிறந்த செயல்பாடுகளைக் கொண்டுவர வேண்டும். அதேசமயம், கேப்டன்ஷிப் செய்வதற்கு நம்மிடம் பல வீரர்கள் இருக்கின்றனர். சமீபத்தில்கூட இந்திய டி20 அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் செயல்பட்டார்.

அதேபோல சுப்மன் கில் ஐபிஎல் தொடரில் கேப்டனாகச் செயல்பட உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வயதாகும்போது உங்களுக்குக் கடினமான சூழ்நிலைகள் ஏற்படும். குறிப்பாக, ஒவ்வோர் அணியும் மூத்தவீரர்களைவிட இளம்வீரர்களுக்கே முன்னுரிமை கொடுப்பார்கள். நானும் இந்தச் சூழ்நிலையைச் சந்தித்துள்ளேன். ஆனால் அனுபவத்திற்கு என்றுமே மாற்று கிடையாது. அந்த வகையில் ரோகித் சர்மாவிடம் அதிகப்படியான அனுபவம் இருக்கிறது. ஆனாலும் அவருடைய அணி நிர்வாகம் வருங்காலத்தைப் பற்றி நினைக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.