Sarfaraz Khan
Sarfaraz Khan PT
கிரிக்கெட்

”சர்ஃபராஸ் கான் யாரையும் அவமதிக்கல”- அன்று நடந்தது என்ன? மும்பை கிரிக்கெட் வட்டாரம் சொல்வது இதுதான்!

Rishan Vengai

மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடவிருக்கும் இந்திய அணி ஜூலை 12 தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரையில் 2 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது. அதில் முகேஷ் குமார், ருதுராஜ் ஹெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எஸ்.பரத் மற்றும் இஷான் கிஷான் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் தர போட்டிகளில் அதிகப்படியான சராசரியுடன் சிறப்பாக விளையாடிவரும் சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது பெரிய சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரிலும் சர்ஃபராஸ் கான் இடம்பெறாத நிலையில், அப்போதும் இந்திய தேர்வுக்குழு மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்நிலையில், மீண்டும் சர்ஃபராஸ் கான் இந்திய அணியில் இடம்பெறாமல் இருப்பது, இந்திய ரசிகர்கள் மற்றும் முன்னாள் இந்திய வீரர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் இந்திய தேர்வுக்குழுவை சாடிவருகின்றனர்.

சர்பராஸ் கான் ஏன் அணியில் இடம்பெறவில்லை? பிசிசிஐ அதிகாரி விளக்கம்

கடந்த ரஞ்சிக்கோப்பை சீசனில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியின்போது சதம் விளாசிய சர்ஃபராஸ் கான், அப்போதைய தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மாவை நோக்கி கைகளை நீட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும் அவருடைய உடற் தகுதியும் இந்திய அணியின் தேர்விற்கு ஒரு குறையாக இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

Sarfaraz Khan

சமீபத்தில் சர்ஃபராஸ் கானை ஏன் இந்திய அணிக்குள் எடுக்கவில்லை? என்பது குறித்து பேசியிருந்த பிசிசிஐ அதிகாரி ஒருவர், “சர்ஃபராஸ் கான் அணியில் எடுக்கப்படாமல் இருக்க அவரின் உடற்தகுதி மட்டும் காரணம் இல்லை. அவர் களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நடந்து கொள்ளும் முறை சரியாக இல்லை. ஆக்ரோஷமாக செயல்பட்டு வரும் அவரை நாங்கள் கவனித்துக் கொண்டு இருக்கிறோம். அவருக்கு கட்டுப்பாடு தேவை. சர்ஃபராஸ் கான் தனது தந்தையும் பயிற்சியாளருமான நௌஷாத் கானுடன் இணைந்து அந்த அம்சங்களில் பணியாற்றுவார் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

சர்ஃபராஸ் கான் யாரையும் அவமதிக்கவில்லை!

ரஞ்சிக்கோப்பை தொடரில் மும்பை அணிக்காக விளையாடிவரும் சர்ஃபராஸ் கான், 37 போட்டிகளில் 13 சதங்கள் மற்றும் 9 அரைசதங்கள் உட்பட 79 சராசரியுடன் 3505 ரன்கள் குவித்துள்ளார். இந்த சராசரியானது இதற்கு முன்னர் எந்த ஒரு இந்திய வீரராலும் நிகழ்த்தப்படாத ஒன்றாக இருந்து வருகிறது. இருப்பினும் தொடர்ந்து சர்ஃபராஸ் கானுக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து சர்ஃபராஸ் கானின் உடற் தகுதியும், ஒழுக்கமின்மையும் குற்றச்சாட்டாக வைக்கப்பட்டுள்ள நிலையில், மும்பை கிரிக்கெட்டைச் சேர்ந்த சர்ஃபராஸ் கானிற்கு நெருக்கமானவர்கள் இதை மறுத்துள்ளனர்.

டெல்லிக்கு எதிரான அன்றைய போட்டியில் என்ன நடந்தது என்று தெரிவித்திருக்கும் மும்பை கிரிக்கெட்டிற்கு நெருக்கமானவர்கள், “டெல்லியில் நடந்த ரஞ்சி போட்டியின் போது சர்ஃபராஸின் அந்த கொண்டாட்டமானது, அவருடைய அணி வீரர்களுக்கும், பயிற்சியாளர் அமோல் முஜும்தாருக்காக மட்டும் தான் இருந்தது. மாறாக தேர்வாளர் சலீல் அன்கோலா மற்றும் சேத்தன் ஷர்மாவிற்கு எதிராகவோ சர்ஃபராஸ் கான் அதை செய்யவில்லை. அந்த போட்டியில் நெருக்கடியான சூழ்நிலையில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சர்ஃபராஸ் கான், சதமடித்து அணியை கடினமான இடத்திலிருந்து மீட்டதால் தான் அத்தகைய கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்” என்று பிடிஐ உடன் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

Sarfaraz Khan

மேலும் “உங்களுடைய பார்வையில் கொண்டாட்டத்தின் போது கையை உயர்த்துவது கூட குற்றமா? என்று கேள்வி எழுப்பியதாகவும், அவர் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் இருக்கும் டிரஸ்ஸிங் ரூம் நோக்கி தான் கையை நீட்டி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்” என்றும் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளது.

சர்ஃபராஸ் கானை ஒரு மகனை போல் பார்க்கிறார்!

மேற்கூறிய குற்றச்சாட்டுகள் மட்டுமில்லாமல், சர்ஃபராஸ் கானின் செயலால் மத்தியப் பிரதேச பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட்டும் அதிருப்தி அடைந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் அதுகுறித்து பேசுகையில், “சந்து சார் சர்ஃபராஸ்ஸை ஒரு மகனைப் போல தான் நடத்திவருகிறார். அவரைப் பற்றி எப்போதும் நல்ல விஷயங்களை மட்டுமே கூறுவார். அவருக்கு 14 வயதிலிருந்தே சர்ஃபராஸைத் தெரியும். அவர் சர்பராஸ் மீது ஒருபோதும் கோபப்பட மாட்டார்” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் தற்போதைய இந்திய அணி தேர்வுக்கான உடற்தகுதி அளவுகோல் 16.5 ஆக இருக்கும் நிலையில், சர்ஃபராஸ் அதை நிரூபித்துக்காட்டிவிட்டார் என்றும், பல போட்டிகளில் அவர் இரண்டு நாட்கள் பேட்டிங் செய்த பிறகும் அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து பீல்டிங்கும் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் எதற்காக சர்ஃபராஸ் கானை இந்திய அணியில் எடுக்கவில்லை என்ற காரணம் அவசியம் தெரிய வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளதாக தெரிகிறது.