விராட் கோலி
விராட் கோலி ட்விட்டர்
கிரிக்கெட்

“உங்கள் எண்ணங்கள் தவறு; கோலி எப்போதும் ஃபார்மில்தான் இருக்கிறார்”- முன்னாள் தேர்வுக்குழு தலைவர்

Rishan Vengai

இன்னும் சில தினங்களில் கோடை வெயிலைக் குளிர்விக்கக் காத்திருக்கிறது, இந்த ஆண்டுக்கான (17வது) ஐபிஎல் சீசன். இதில் வழக்கம்போல் 10 அணிகள் களம் காண உள்ளன. மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில், சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இதற்காக வீரர்கள் அவ்வணி கூடாரத்தில் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு கேள்விகளும் விமர்சனங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. மார்ச் 22ஆம் தேதி, பெங்களூருவுக்கான முதல் போட்டி தொடங்க இருக்கும் நிலையில், நடப்பு ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடினால்தான் கோலிக்கு உலகக்கோப்பையில் இடம் கிடைக்கும் என்ற கருத்து பரவலாக கூறப்பட்டுவருகிறது.

virat kohli
2014 மற்றும் 2016 என இரண்டு டி20 உலகக்கோப்பையில் தொடர்நாயகன் விருதுவாங்கிய வீரரும், கடந்த 2022 டி20 உலகக்கோப்பையில் 639 ரன்கள் குவித்தவரும், சர்வதேச கிரிக்கெட்டில் 80 சதங்களை பதிவுசெய்திருக்கும் வீரரான விராட் கோலி, இன்னும் என்னதான் நிரூபிக்க வேண்டும் என்று தெரியவில்லை.

விராட் கோலி டி20 உலகக்கோப்பையில் இடம்பெறுவது கேள்விக்குறியாக இருந்துவரும் நிலையில், முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தற்போதைய தேர்வுக்குழுவிற்கு தன்னுடைய அட்வைஸை பகிர்ந்துள்ளார்.

“விராட் கோலி எப்போதும் ஃபார்மில்தான் இருக்கிறார்!” - எம்எஸ்கே பிரசாத்

விராட் கோலியின் ஃபார்ம் குறித்தும், அவர் எந்தளவிற்கு டி20 உலகக்கோப்பையில் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பது குறித்தும் பேசியிருக்கும் எம்எஸ்கே பிரசாத், “டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு கோலி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர். ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடினால்தான் கோலிக்கு உலகக்கோப்பை அணியில் இடம் என தேர்வாளர்கள் நினைக்க கூடாது. ஐபிஎல் அவருடைய தரத்தை நிரூபிக்கும் இடமில்லை, அவர் எப்போதும் ஃபார்மில்தான் இருந்துவருகிறார். குடும்ப சூழ்நிலையால்தான் இந்தியப் போட்டிகளைத் தவறவிட்டார், மாறாக ஃபார்மில் இல்லை என்பதால் இல்லை. அவர் நீண்ட காலமாக ஃபார்மில் இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரிலும் ரன்களை குவிப்பார்” என்றுள்ளார்.

2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடவிருக்கும் விராட் கோலி, தற்போது ஆர்சிபி அணியுடன் இணைந்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். வலைப்பயிற்சியில் சிறந்த டச்சில் இருக்கும் கோலியின் வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர்.

virat kohli - maxwell

ஆர்சிபி பெண்கள் அணி கோப்பை வென்ற நிலையில் பேசியிருந்த விராட் கோலி, “அதை இரட்டிப்பாக மாற்றுவோம்” என்று பேசியிருந்தார். 2024 ஐபிஎல் முதல் போட்டியானது மார்ச் 22ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது.