மொஹ்சின் நக்வி AP
கிரிக்கெட்

ஆசியக் கோப்பையை எடுத்துச் சென்ற அமைச்சர்.. தங்கப் பதக்கம் வழங்க பாகிஸ்தான் முடிவு!

ஆசியக் கோப்பையை எடுத்துச் சென்ற பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்விக்கு, அந்த நாட்டு அரசு தங்கப் பதக்கம் வழங்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Prakash J

ஆசியக் கோப்பையை எடுத்துச் சென்ற பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்விக்கு, அந்த நாட்டு அரசு தங்கப் பதக்கம் வழங்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

துபாயில், சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. அப்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்தியா மறுத்தது. இதையடுத்து, அந்தக் கோப்பையை மொஹ்சின் நக்வி கொண்டு சென்றார். இந்திய அணியினர் கோப்பை இல்லாமலேயே வெற்றியைக் கொண்டாடினர்.

india

இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இந்திய வீரர்களின் இந்தச் செயல் உலகம் முழுவதும் பரவலாக விமர்சிக்கப்பட்டது. விளையாட்டில் அரசியல் கூடாது என அறிவுரைகளும் வழங்கப்பட்டன. அதேநேரத்தில், இந்தக் கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பிசிசிஐயும் வலியுறுத்தியது. அதற்குப் பதிலளித்த நக்வி, ”கோப்பையை பெற பிசிசிஐ ஆர்வமாக இருந்தால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்திற்கு வந்து என்னிடம் இருந்து கோப்பையை பெற்றுக்கொள்ளலாம். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அதற்காக பிசிசிஐயிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்” எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து, அவர் ஊடகங்களின் தலைப்புச் செய்திகளிலும் இடம்பிடித்தார்.

இந்த நிலையில், நக்வியின் நிலைப்பாடு பாகிஸ்தானின் அரசியல் மற்றும் விளையாட்டுச் சமூகங்கள் முழுவதும் பாராட்டுகளைத் தூண்டியுள்ளது, மேலும் நாட்டின் உயரிய சிவில் விருதுகளில் ஒன்றான, ’ஷாஹீத் சுல்பிகர் அலி பூட்டோ எக்ஸலன்ஸ் தங்கப் பதக்கம்’ அவருக்கு வழங்கப்பட உள்ளது. ’தி நேஷன்’ பத்திரிகையில் வெளியான ஒரு செய்தியின்படி , சிந்து மற்றும் கராச்சி கூடைப்பந்து சங்கங்களின் தலைவரான வழக்கறிஞர் குலாம் அப்பாஸ் ஜமால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மொஹ்சின் நக்வி

”இந்தியாவுடன் அரசியல் மற்றும் விளையாட்டு பதற்றங்கள் அதிகரித்துள்ள நேரத்தில் நக்வியின் நடவடிக்கைகள் தேசிய பெருமையை மீட்டெடுத்துள்ளன. இது கிரிக்கெட்டைப் பற்றியது மட்டுமல்ல. இது கண்ணியம், இறையாண்மை மற்றும் அழுத்தத்தின் கீழ் வளைந்து கொடுக்க மறுப்பது பற்றியது" என்று ஜமால் தெரிவித்துள்ளார். இதற்கான விழா, விரைவில் கராச்சியில் நடைபெற இருப்பதாகவும், அதில் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி தலைமை விருந்தினராக கலந்துகொள்ள இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.