siraj pt web
கிரிக்கெட்

விக்கெட் வேட்டைக்கு கிடைத்த பலன்... மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய முகமது சிராஜ்!

ஆசியக்கோப்பையின் இறுதிப் போட்டி அண்மையில் நடந்து முடிந்தது. இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

Angeshwar G

ஆசியக்கோப்பையின் இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 50 ரன்களை மட்டுமே எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் விக்கெட் வேட்டையாடினார். 4 ஆவது ஓவரை வீசிய அவர், அதில் மட்டும் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இலங்கை அணியை மொத்தமாக நிலைகுலையச் செய்த அவர் அந்த போட்டியில் மொத்தமாக 6 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

முகமது சிராஜ்

இந்நிலையில் ஐசிசி ஒருநாள் போட்டியில் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் சிராஜ் முதலிடம் பிடித்துள்ளார். 8 புள்ளிகள் முன்னேறி ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் சிராஜ். ஹேசில்வுட் இரண்டாம் இடத்திலும், டிரெண்ட் போல்ட் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். முதல் பத்து இடங்களுக்குள் இந்திய அணியின் சார்பில் குல்தீப் யாதவ் 9 ஆவது இடத்தில் உள்ளார்.

ஐசிசி ஒருநாள் போட்டி, பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் 857 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் 814 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். இந்திய அணியின் சார்பில் முதல் 10 இடங்களில் விராட் கோலி 8 ஆவது இடத்திலும் ரோஹித் சர்மா 10 ஆவது இடத்திலும் உள்ளனர்.