ஹசின் ஜஹான், முகமது ஷமி எக்ஸ் தளம்
கிரிக்கெட்

”ரூ.4 லட்சம் போதாது” - முகமது ஷமிக்கு எதிராக அவரது மனைவி உச்ச நீதிமன்றத்தில் மனு!

”ரூ.4 லட்சம் போதாது. பராமரிப்பு தொகையை அதிகரித்து தர வேண்டும்” என முகமது ஷமியின் முன்னாள் மனைவி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

Prakash J

”ரூ.4 லட்சம் போதாது. பராமரிப்பு தொகையை அதிகரித்து தர வேண்டும்” என முகமது ஷமியின் முன்னாள் மனைவி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரராக இருப்பவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முகமது ஷமி. 2023 உலகக்கோப்பை தொடரில் இடம்பெற்றிருந்த அவர், அதன்பிறகு தொடர்ந்து காயம் காரணமாக ஓரங்கட்டப்பட்டு வருகிறார். இவருக்கு, கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முகமது ஷமி மற்றும் ஹசின் ஜஹானுக்குத் திருமணம் ஆனது. பின்னர், அடுத்த நான்காண்டுகளில் ஷமி மீது குடும்ப வன்முறை தொடர்பாக ஹசின் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வீட்டு வன்முறையைத் தவிர, ஷமி வரதட்சணை துன்புறுத்தல் மற்றும் மேட்ச் பிக்சிங் செய்ததாகவும், தனது குடும்பச் செலவுகளை நடத்துவதற்கான நிதிப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஹசின் ஜஹான், முகமது ஷமி

இதுதொடர்பாக, ஷமி மீது வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். அப்போது முகமது ஷமி தனது மனைவிக்கு ரூ. 50,000 மற்றும் மகளுக்கு ரூ.80,000 மாதாந்திர ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று அலிபூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், மாதம் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு இந்த மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, ஹசின் ஜஹான் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது ஹசின் ஜஹானுக்கு மாதம் ரூ.1.5 லட்சமும், மகளுக்கு ரூ. 2.5 லட்சமும் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஷமியின் வருவாய், அவரது மகளின் எதிர்காலம் மற்றும் இருவரும் பிரிவதற்கு முன்பு அவரது பிரிந்த மனைவி ஹசின் ஜஹான் அனுபவித்த வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த தொகை தீர்மானிக்கப்பட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.

ஹசின் ஜஹான், முகமது ஷமி

இதை, இறுதி செய்ததற்காக ஹசின் ஜஹான் நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், முகமது ஷமியிடமிருந்து விவாகரத்து பெற்ற அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜஹான், தங்களுக்கு ஷமி தரும் ஜீவனாம்சம் தொகை பற்றவில்லை என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இம்மனு விசாரணைக்கு வந்த நிலையில், இதுதொடர்பாக மேற்கு வங்க அரசும் ஷமியும் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. ஷமிக்கும் அவரது மனைவிக்கும் இடையே நடைபெற்றுவரும் சர்ச்சையில் இந்த சட்ட முன்னேற்றம் மற்றொரு அத்தியாயத்தைக் குறிக்கிறது.