Modi - Shami
Modi - Shami ICC
கிரிக்கெட்

மனதளவில் உடைந்திருக்கும்போது, அவர் தந்த நம்பிக்கை மிகப்பெரியது! - பிரதமர் மோடியை புகழ்ந்த ஷமி

Rishan Vengai

2023 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணியே வெற்றிபெறும், சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்துவது எல்லாம் அவ்வளவு சுலபம் அல்ல, இந்தியாவிற்குதான் நிச்சயம் கோப்பை என்றெல்லாம் சொல்லப்பட்ட உலகக்கோப்பை இறுதிப்போட்டியானது இந்திய ரசிகர்களின் கனவை சுக்குநூறாக உடைத்தது. தொடர் முழுவதும் ஜொலித்துவந்த இந்திய அணி கோப்பை வெல்வதற்கான பெரிய போட்டியில் கோட்டைவிட்டது.

modi - rohit - kohli

இந்நிலையில் தோல்விக்கு பிறகான இந்திய வீரர்கள் அனைவரும் மனதளவில் உடைந்து கண்ணீர் ததும்பிய முகத்தோடு காணப்பட்டனர். இறுதிப்போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற அணிக்கு கோப்பையை வழங்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேராக பணிசெய்ய சென்றுவிடாமல் தோல்வியால் துவண்டிருந்த இந்திய வீரர்களை நேராக சென்று டிரெஸ்ஸிங் ரூமில் சந்தித்தார். தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்களுக்கு ஆறுதல் தெரிவித்த இந்திய பிரதமர், இந்த நாடும், நாட்டு மக்களும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என ஆதரவும் தெரிவித்தார்.

Modi - shami

பிரதமரின் இந்த செயலானது, ”தோல்வியுற்ற சந்திரயான்-2 ஏவுதலுக்குப் பிறகு அப்போதைய இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு ஆறுதல் கூறிய முந்தைய தருணத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது”. அதுவும் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை மோடி கட்டிப்பிடித்த புகைப்படமானது மிகவும் வைரலானது.

அவர் கொடுத்த நம்பிக்கை மிகப்பெரியது! - புகழ்ந்து பேசிய ஷமி

தோல்வியில் இருந்த இந்திய வீரர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் பிரதமர் மோடி செய்த செயலை முகமது ஷமி பாராட்டி பேசியுள்ளார். அவர் பேசுகையில், “உலகக்கோப்பை இறுதிப்போட்டி போன்ற ஒரு ஆட்டத்தில் தோல்வியடைந்த பிறகு நாட்டின் பிரதமரிடமிருந்து பெறும் ஊக்கமென்பது உங்களின் நம்பிக்கையை அதிகரிக்கிறது. ஏற்கனவே ஒரு மிகப்பெரிய போட்டியின் தோல்வியால் உங்களின் மனஉறுதி மிகவும் குறைவாக உள்ளது. அதுபோன்ற ஒரு தருணத்தில் நாட்டின் மிக முக்கியமான ஒருவர் வந்து உங்களுக்கு ஆதரவு அளிப்பது மிகவும் வித்தியாசமான அனுபவம்” என்று மோடியை புகழ்ந்து பேசியுள்ளார் முகமது ஷமி.

நடந்து முடிந்த 2023 உலகக்கோப்பையில் வெறும் 7 போட்டிகளில் மட்டுமே விளையாடிய முகமது ஷமி, தன்னுடைய அபாரமான பந்துவீச்சால் 24 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக முடித்தார்.