ஆஸ்திரேலியா வலிமையான அணி இல்லை என முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறினார் web
கிரிக்கெட்

'ஆஸ்திரேலியா வலிமையான அணி அல்ல; 2023 ஃபைனலிலும் தோற்றிருக்க வேண்டியவர்கள்' - முன்னாள் வீரர்

ஆஸ்திரேலியா 2023 வரை வலிமையான அணியாக இருந்தது என்றும், தற்போது அது வலிமையான அணி இல்லை என்றும் முன்னாள் இந்திய வீரர் கூறியுள்ளார்.

Rishan Vengai

இந்திய முன்னாள் வீரர் ஆஸ்திரேலிய அணியின் வலிமையை கேள்விக்குட்படுத்தியுள்ளார். 2023 உலகக்கோப்பை வென்றபோதும், தொடர்ந்து பல போட்டிகளில் தோல்வியடைந்ததால், ஆஸ்திரேலியா வலிமையான அணி அல்ல என்று அவர் கூறியுள்ளார். ஹர்திக் பாண்டியா 2023 இறுதியில் விளையாடியிருந்தால், இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என்றும் கூறினார்.

உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஐசிசி கோப்பைகள் வென்ற அணிகளாக 10 கோப்பையுடன் ஆஸ்திரேலியாவும், 7 கோப்பையுடன் இந்தியாவும் அடுத்தடுத்த இடங்களில் நீடிக்கின்றனர்.

ஆனால் 2019 மற்றும் 2023 இரண்டு உலகக்கோப்பையிலும் இந்திய அணிக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது. விராட் கோலி தலைமையில் அனைத்துமே சரியாக சென்றபோது காயம் காரணமாக இன்ஃபார்மில் இருந்த ஷிகர் தவான் அரையிறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் போனது. அது அணியின் தோல்விக்கு பெரிய காரணமாக அமைந்தது.

IND vs NZ - 2019 Semi Final

அதேபோல 2023 உலகக்கோப்பையிலும் இறுதிப்போட்டிவரை சென்ற இந்திய அணியில் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை. அது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது. தற்போதுவரை 2023 இறுதிப்போட்டியில் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா விளையாடியிருந்தால் சொந்தமண்ணில் இந்தியா கோப்பை வென்றிருக்கும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் அதிகமாக இருந்துவருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா 2026 டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து லீக் சுற்றோடு வெளியேறியிருக்கும் நிலையில், மீண்டும் அதே கருத்தை இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

2023 ஃபைனலில் ஆஸ்திரேலியா தோற்றிருக்கும்..

2026 டி20 உலகக்கோப்பை லீக் போட்டிகளில் ஜிம்பாப்வே மற்றும் இலங்கைக்கு எதிராக படுதோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா பாதியிலேயே தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஜிம்பாப்வே முதல்முறையாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்று சாதனை படைத்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா தோல்விக்கு பிறகு எக்ஸ்தளத்தில் பதிவிட்டிருக்கும் முகமது கைஃப், "2023 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற பிறகு ஆஸ்திரேலியா வலிமையான அணி என்று சொல்லப்பட்டது. ஆனால் அதற்குபிறகு 2024 டி20 உலகக்கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி, 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என அனைத்திலும் அவர்கள் ஒரு கூர்மையான வீழ்ச்சியைச் சந்தித்தனர், அவர்கள் வலிமையான அணி இல்லை. ஹார்திக் பாண்டியா 2023-ல் அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தால், ஆஸ்திரேலியே அங்கேயும் தோற்றிருக்கும்" என்று கூறியுள்ளார்.

அவரின் கூற்றுப்படி 2023 உலகக்கோப்பை வென்றபோதும் ஆஸ்திரேலியா வலிமையான அணியாக இருக்கவில்லை என்று கூறியிருப்பதாக ரசிகர்கள் கருத்திட்டு வருகின்றனர்.