பாகிஸ்தான் முன்னாள் வீரர், 90களில் பாகிஸ்தான் அணி இந்தியாவை பயமுறுத்தும் ஒரு அணியாக இருந்ததாகவும், ஆனால் தற்போதைய பாகிஸ்தான் அணியை இந்திய வீரர்கள் மதிப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.
உலக கிரிக்கெட்டில் அனைத்து மோதல்களுக்கும் தாய் மோதல் என கருதப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் மோதலானது மரணித்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 1952-ல் தொடங்கிய இந்த ரைவல்ரி 2026-ல் முழுமையாக மங்கிவிட்டதாகவும், மரணித்துவிட்டதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. அந்தளவு இந்திய அணியின் திறனுக்கும், பாகிஸ்தான் அணியின் திறனுக்கும் இடையேயான வித்தியாசம் ஏணி வைத்தாலும் எட்டாதளவு அதிகமாக உள்ளது.
அதே கருத்தைத் தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் கூறியுள்ளார். அவர் 90களில் இருந்த பாகிஸ்தான் அணியை பார்த்தால் இந்திய அணி பயப்படும் என்றும், தற்போதைய பாகிஸ்தான் அணியை வீழ்த்தினால் அந்த வெற்றியை கூட இந்தியா கொண்டாடுவதில்லை. தற்போதைய பாகிஸ்தான் அணியை, இந்தியா மதிப்பதில்லை என பேசியுள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பை தொடங்கியதிலிருந்து பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு எதிராக விளையாடுமா என்ற கேள்வி அதிகமாக இருந்தது. முதலில் இந்தியாவிற்கு எதிராக விளையாட மாட்டோம் என அடம்பிடித்த பாகிஸ்தான் அணி, முடிவில் விளையாட சம்மதம் தெரிவித்து பங்கேற்றது. பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் நசுக்கிய இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது.
இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து பேசியிருக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது அமீர், ”90களில் இருந்த பாகிஸ்தான் அணிக்கும், தற்போதைய அணிக்கும் வித்தியாசம் உள்ளது. அப்போது இந்தியா எங்களைப் பார்த்து பயந்தது, இப்போது அவர்கள் எங்களை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, எங்கள் விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகும், போட்டியில் வென்ற பிறகும் கூட அவர்கள் அந்த வெற்றியை கொண்டாடுவதில்லை" என பேசியுள்ளார்.