மிட்செல் ஸ்டார்க்
மிட்செல் ஸ்டார்க் X
கிரிக்கெட்

”உலகத்தின் சிறந்த டி20 லீக்கிற்கு திரும்புவது மகிழ்ச்சி”! -ரூ.24.75 கோடி விலைக்கு சென்ற ஸ்டார்க்!

Rishan Vengai

2024 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கத்தில் நடைபெற்றது. மதியம் 1.30 மணிக்கு தொடங்கிய வீரர்கள் ஏலத்தில் 333 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றனர். தொடக்கம் முதலே அதிரடி ஏலத்தில் மிரட்சியை ஏற்படுத்திய மினி ஏலம், எப்போதும் இல்லாத வகையில் அதிக விலைக்கு சென்ற வீரர்களை கண்டுள்ளது. பல இளம் இந்திய வீரர்கள் நல்ல விலைக்கு சென்றனர்.

இந்நிலையில் அதிக விலைக்கு சென்ற மிட்செல் ஸ்டார்க்கை வாங்குவதற்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே போர் நடந்தது என்றே சொல்லவேண்டும். 20 கோடிவரை சென்ற ஸ்டார்க்குக்கான ஏலம் அதற்கு பிறகும் அனல் பறந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கையில் இருந்து பிடிங்கி அணியில் சேர்த்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

ஸ்ரேயாஸ் கேப்டன்சியின் கீழ் விளையாடுவதில் ஆர்வமாக இருக்கிறேன்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டது குறித்து பேசியிருக்கும் மிட்செல் ஸ்டார்க், “உலகின் தலைசிறந்த டி20 தொடருக்கு திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது. ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சியின் கீழ் விளையாடுவதற்கும், அவரது சிந்தனை செயல்முறையைப் புரிந்து கொள்வதற்கும் நான் மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன்.

நான் கடந்த சில வருடங்களாக ஏற்றம் இறக்கம் என இரண்டையும் கண்டுள்ளேன். ஆனால் என்னுடைய அனுபவம் ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட உதவும் என நினைக்கிறேன். உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் விளையாடுவது எப்போதும் போட்டி நிறைந்ததாக இருக்கும். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் இணைந்து விளையாடுவதற்கும், ஈடன் கார்டன் மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவை பெறும் தருணத்திற்காகவும் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

நடந்துமுடிந்த உலகக்கோப்பையில் 10 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த மிட்செல் ஸ்டார்க், உலகக்கோப்பயின் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். அதில் சுப்மன் கில் மற்றும் கேஎல் ராகுலின் விக்கெட்டும் அடங்கும்.