kl rahul web
கிரிக்கெட்

”கேஎல் ராகுல் இந்திய அணியில் தந்தையைப் போன்ற ஒரு வீரர்..” - முன்னாள் ENG கேப்டன் புகழாரம்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அழுத்தமான நிலையிலிருந்து இந்திய அணியை மீட்டு எடுத்துவந்த கேஎல் ராகுல் சதமடித்து அசத்தினார்.

Rishan Vengai

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.

முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடந்துவரும் நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் அடித்தன.

அதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 92 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் இன்னிங்ஸில் சதமடித்த ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேற, ஆட்டத்தில் இங்கிலாந்தின் கையே ஓங்கியிருந்தது.

kl rahul - rishabh pant

ஒரு இக்கட்டான நிலைமையில் இருந்த இந்திய அணியை மீட்டுஎடுத்துவந்த கேஎல் ராகுல், ஒரு பக்கம் தூணாக நிலைத்து நிற்க மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் ரன்களை எடுத்துவந்தார். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி அடுத்தடுத்து சதங்களை பதிவுசெய்ய இந்தியா 371 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. கேஎல் ராகுல் 137 ரன்களும், ரிஷப் பண்ட் 118 ரன்களும் அடித்தனர்.

கேஎல் ராகுலை புகழ்ந்த மைக்கேல் வாகன்..

கேஎல் ராகுலின் நிதானமான ஆட்டம் இந்தியாவை முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறுமளவு வலுவான நிலைக்கு எடுத்துச்சென்றுள்ளது. கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்தை ஆல் அவுட் செய்யும்பட்சத்தில் தொடரை 1-0 என வெற்றியுடன் தொடங்கும்.

kl rahul

இந்த சூழலில் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்த கேஎல் ராகுலை புகழ்ந்திருக்கும் மைக்கேல் வாகன், “கேஎல் ராகுல் இந்திய அணியில் தந்தையைப் போன்ற ஒரு வீரர். இளம் வீரர்கள் நிறைந்த அணியில் கேஎல் ராகுல் மட்டுமே மூத்தவர். அவர் இந்த பேட்டிங் வரிசைக்கு பிடிப்பாக இருக்கிறார், அவரைச் சுற்றியே மற்ற வீரர்கள் அதிரடியாக விளையாடுகிறார்கள். அவரிடம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான சிறந்த டெக்னிக் உள்ளது. ஒவ்வொரு அணியிலும் உங்களுக்கு கேஎல் ராகுல் போன்ற ஒரு பேட்டர் தேவை” என்று புகழ்ந்து பேசியுள்ளார்.