மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் முதல் சதம் அடித்த மும்பை வீராங்கனை நாட் ஸ்கைவர், 57 பந்தில் 16 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 100 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இதன்மூலம், 5 முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் சாதனையையும் படைத்துள்ளார். ஆர்சிபி அணி 35 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
2026ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் தொடர் கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் நடந்துவருகிறது. மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, உபி வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜியண்ட்ஸ் முதலிய 5 அணிகள் பலப்பரீட்சை நடத்திவரும் நிலையில், முதல் 5 போட்டிகளிலும் ஒரு தோல்வி கூட இல்லாமல் வெற்றிபெற்ற ஆர்சிபி அணி முதல் அணியாக பிளேஆஃப்க்கு தகுதிபெற்று அசத்தியுள்ளது.
இந்தசூழலில் 5 தொடர் வெற்றிக்கு பிறகு 6வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக 109 ரன்னுக்கு சுருண்ட ஆர்சிபி படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இன்று நடைபெறும் 7வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்டு விளையாடிவருகிறது ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 199 ரன்கள் குவித்து மிரட்டியது. 3வது வரிசையில் களமிறங்கிய நாட் ஸ்கைவர் பிரன்ட் 57 பந்தில் 16 பவுண்டரிகள் 1 சிக்சருடன் சதமடித்து அசத்தினார்.
இதன்மூலம் மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் சதமடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்து அசத்தினார் நாட் ஸ்கைவர். மேலும் WPL-ல் 5 முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
200 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிவரும் ஆர்சிபி அணி 35 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.