உலக கிரிக்கெட்டில் ஆஷஸ் தொடருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்துவருகிறது. 1882-ல் தொடங்கப்பட்ட இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் 100 ஆண்டுகளை கடந்தும் வெற்றிகரமான தொடராக ஜொலித்து வருகிறது.
இதுவரை 73 ஆஷஸ் தொடர்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் ஆஸ்திரேலியா அணி 34 முறையும், இங்கிலாந்து அணி 32 முறையும் வென்றுள்ளன. 7 தொடர்கள் சமனில் முடிந்துள்ளது.
கடந்த 2021-22 ஆஷஸ் தொடரை வென்ற ஆஸ்திரேலியா, 2023 ஆஷஸ் தொடரை சமன்செய்ததன் மூலம் கோப்பையை தங்கள் வசம் வைத்துள்ளது.
இந்நிலையில் 2025-26 ஆஷஸ் தொடரானது வரும் நவம்பர் 21 முதல் தொடங்குகிறது.
2025-26 ஆஷஸ் தொடரானது ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் நிலையில், ஜோ ரூட் எப்படி விளையாடப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுவரை 39 சர்வதேச டெஸ்ட் சதங்களை அடித்திருக்கும் ரூட், ஆஸ்திரேலியா மண்ணில் ஒரு சதம் கூட அடித்ததில்லை. ஆஸ்திரேலியா மண்ணில் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 35 சராசரியுடன் 9 அரைசதங்களை மட்டுமே அடித்துள்ளார். அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 89-ஆக இருந்துவருகிறது.
இந்நிலையில் போட்காஸ் ஒன்றில் பேசியிருக்கும் மேத்யூ ஹைடன், இம்முறை 2025-26 ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் ஆஸ்திரேலியாவில் சதமடிக்கவில்லை என்றால் MCG மைதானத்தில் நிர்வாணமாக சுற்றிவருவேன் என்று கூறியுள்ளார். இது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் மேத்யூ ஹைடனின் மகள் ‘தயவுசெய்து சதம் அடித்துவிடுங்கள் ஜோ ரூட்’ என வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த விசயமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.