டெஸ்ட் மற்றும் டி20 வடிவத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும், ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றனர். அக்டோபர் 19-ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஒருநாள் அணியில் இரண்டு வீரர்களும் இடம்பெற்றாலும் ரோகித் சர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபியை வென்றுகொடுத்த கையோடு ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியிருப்பது முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில், தற்போது இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தசூழலை தொடர்ந்து 2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடுவார்கள் என கருதப்பட்ட ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வை நோக்கி செல்வார்களோ என்ற அச்சம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
இதுகுறித்து பேசியிருக்கும் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் அவமரியாதை செய்யப்பட்டுள்ளனர் என்று கம்பீர் மற்றும் தேர்வுக்குழுவை சாடியுள்ளார்.
க்ரிக்டிராக்கர் உடனான உரையாடலில் கோலி, ரோகித் இருவரும் ஓய்வை அறிவிக்கபோகிறார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “ஏற்கனவே அது நடந்து விட்டது. இல்லையென்றால், கோலி ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டு வெளியேறப்போகிறார்? வரவிருக்கும் ஆஸ்திரேலியா தொடருக்கு அவர் ஏற்கனவே மனதளவில் தயாராகத் தொடங்கிவிட்டார். ஏனென்றால் இந்திய அணியில் அவரைச் சுற்றியுள்ள சூழல், அவரை தேவையற்றவராக உணர வைத்தது. ஒரு வீரர், அவர் எவ்வளவு பெரியவராக இருந்தாலும், தான் அணிக்கு தேவையில்லை அல்லது தனக்கு மரியாதை இல்லை என்று உணரத் தொடங்கினால், சுயமரியாதை மற்றும் கண்ணியம் கொண்ட வீரர் ஒருபோதும் தொடர மாட்டார்” என்று கூறினார்.
மேலும் ரோகித் சர்மா குறித்து பேசிய அவர், “தற்போது ஏன் கேப்டன்சி மாற்றத்தைச் செய்ய வேண்டும்? நீங்கள் ஒருவரை கேப்டனாக நியமிக்கும்போது, போட்டிகளையும் தொடர்களையும் வெல்வதே குறிக்கோளாக. ஆனால் ஏற்கனவே ரோகித் சர்மா அதைத்தான் செய்து கொண்டிருந்தார். அவர் தலைமையில் அணி நன்றாகவே இருந்தது. இதனால் ரோகித்தும் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளது என்று நான் நினைக்கிறேன். அதை அவர் விரும்புவதால் அல்ல, அவர் அவமரியாதை செய்யப்பட்டதால், ஒரு வீரர் அவமரியாதை செய்யப்பட்ட இடத்தில் ஏன் இருக்க வேண்டும்” என பேசியுள்ளார்.