இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்கிய முடிவு குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரருமான ரோஹித் சர்மா, கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகள் படைத்தவர். 2024ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையைப் பெற்றுத் தந்த அவர், அந்த வடிவ தொடரிலிருந்தும் ஓய்வுபெற்றார். அடுத்து டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார். தற்போது 2027 ஒருநாள் உலகக்கோப்பையைக் கருத்தில் கொண்டு, அவ்வடிவ போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். டி20 மற்றும் டெஸ்ட் போட்டி ஓய்வுக்குப் பிறகும் ஒருநாள் தொடருக்கான கேப்டனாக அவர் அணியில் இருந்தபோதும், எதிர்காலத்தை அணியை உருவாக்கும் வகையில் ஷுப்மன் கில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இதைப் பற்றி ரோகித் இதுவரை எந்தக் கருத்தும் கூறாத நிலையில், தற்போது அதுதொடர்பாக விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், ரோஹித் சர்மாவை நீக்கிய முடிவு குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி கருத்து தெரிவித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.
இதுகுறித்து அவர், “ரோஹித் சர்மா ஒரு வீரர்களின் கேப்டனாக இருந்தார். அவர் சாம்பியன்ஸ் டிராபியை வென்றார். இளைஞர்கள் அவருடன் எப்படி பழகுகிறார்கள் என்பது தொலைக்காட்சித் திரையில் தெரிகிறது. அவர் கேப்டனாக இருந்திருக்க வேண்டும். ஜெய் ஷா உட்பட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) உயர் அதிகாரிகள் தலையிட்டு இது நடப்பதைத் தடுத்திருந்தால், நான் மகிழ்ச்சியடைந்திருப்பேன். அதிர்ஷ்டம் சுப்மான் கில்லை சாதகமாகக் கொண்டிருந்தால், நாம் வெல்ல முடியும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், எந்த கேப்டனுக்கு உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்பதை நான் எப்போதும் பார்க்கிறேன். சுப்மனைப் பொறுத்தவரை, இது 60 சதவீதமாகக் கருதுங்கள். ஆனால் ரோஹித் தலைமையின்கீழ், அவர் அதை வெல்ல முடியும் என்பது 85 சதவீதம் உறுதி" எனத் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டில் ஒருநாள் தொடர் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித், 56 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தி, அவற்றில் 46 போட்டிகளில் வெற்றி பெற்றார். இதில், 2023இல் இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரின்போது அணியை தோல்வியின்றி இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றது அடங்கும்.
சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் மற்றும் விராட் கோலி இருவரின் வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்று பலரும் ஊகித்த வேளையில், இருவரும் தற்போதும் சிறப்பாக விளையாடுவதுடன், ஐசிசி புள்ளிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி, ஆறு இன்னிங்ஸ்களில் 104.45 சராசரியுடன் 492 ரன்கள் எடுத்துள்ளார், இதில் இரண்டு சதங்கள் அடங்கும். இதற்கிடையில், ரோஹித் 8 போட்டிகளில் 398 ரன்கள் குவித்துள்ளார், ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதங்கள் அடித்துள்ளார்.