இந்தியாவில் நடந்துவரும் மகளிர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்தது. இந்தூரில் நடந்த இந்த சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த நபர் இரண்டு ஆஸ்திரேலியா வீராங்கனைகளை தகாத முறையில் தொட்டதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதிப்படுத்தியது. போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளி அகீல் என்ற நபரை கைது செய்தனர்.
2025 மகளிர் உலகக்கோப்பை தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்றுவருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டுள்ள ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன. தோல்வியே இல்லாமல் 6 போட்டிகளில் வென்றுள்ள ஆஸ்திரேலியா அணி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது..
இந்நிலையில் இந்தூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் கடைசி லீக் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டு விளையாடியது ஆஸ்திரேலியா. போட்டியில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவை 97 ரன்னுக்கு சுருட்டி பிரம்மாண்ட வெற்றியை பதிவுசெய்தது.
வெற்றி மிகப்பெரிய கொண்டாட்டமாக இருந்தபோதும், போட்டி முடிந்தபிறகு 2 ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் அணியின் மகிழ்ச்சியை சீர்குலைத்தது.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி லீக் போட்டியில் விளையாடுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராகவும் இந்தூர் ஸ்டேடியத்தில் தான் ஆஸ்திரேலியா விளையாடியது.
இங்கிலாந்து உடனான போட்டிக்கு பிறகு, அடுத்த போட்டிக்காக ஆஸ்திரேலியா வீராங்கனைகள் இந்தூரில் தங்கி பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வியாழக்கிழமை ஹோட்டல் அறையிலிருந்து உணவு விடுதிக்கு செல்லும்போது இருசக்கரவாகனத்தில் வந்த நபர் ஒருவர் பின்தொடர்ந்துவந்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சொல்லப்படுகிறது..
இந்த மோசமான சம்பவம்குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா, ”இந்தூரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு நடந்து செல்லும் போது ஆஸ்திரேலிய மகளிர் அணியின் இரண்டு பேரை மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அணுகி தகாத முறையில் தொட்டதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விஷயம் குறித்து அணியின் பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் போலீஸிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உடனடியாக செயல்பட்ட காவல்துறையினர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட அகீல் கான் என்பவரை கைதுசெய்தனர்.. அவர்மீது ஏற்கனவே குற்றவழக்குகள் உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது..
இச்சம்பவம் குறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா பேசுகையில், ”இந்தியா அதன் விருந்தோம்பல் மற்றும் அக்கறைக்குப் பெயர் பெற்றது. இதுபோன்ற சம்பவங்களை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். குற்றவாளியைப் பிடிக்க உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக மத்தியப் பிரதேச மாநில காவல்துறையை நாங்கள் பாராட்டுகிறோம். வீரர்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த எங்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை மீண்டும் பரிசீலிப்போம்” என்று கூறியுள்ளார்.