Syazrul Ezat Idrus
Syazrul Ezat Idrus twitter
கிரிக்கெட்

ஆடவர் டி20 போட்டி: 7 விக்கெட்கள் வீழ்த்தி மலேசிய பந்துவீச்சாளர் புதிய சாதனை!

Prakash J

கிரிக்கெட்டில் டி20 வருகைக்குப் பிறகு, எண்ணற்ற சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, டி20 போட்டிகளில் இளம் பேட்டர்கள் ரன் மழை பொழிந்து வருகின்றனர். அவர்களுக்குச் சமமாகப் பந்துவீச்சாளர்களும் சாதனை படைத்து வருகின்றனர். அப்படியான ஒரு நிகழ்வுதான் நேற்றைய போட்டியில் நடைபெற்றுள்ளது.

இதுவரை டி20 போட்டி வரலாற்றில், ஒரு போட்டியில் அதிகபட்சமாக பந்துவீச்சாளர்கள் 6 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியுள்ளனர். ஆனால், நேற்று முன்தினம் மலேசியா - சீனா அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 போட்டியில் பந்துவீச்சாளர் ஒருவர் 7 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்காக கண்டங்களின் அடிப்படையில் இருந்து, தனித் தகுதிச்சுற்று போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், பல்வேறு சிறிய நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அப்படி நேற்று முன்தினம் நடைபெற்ற ஆசியக் கண்டத்திற்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் மலேசியா, சீனா ஆகிய அணிகள் மோதின. இந்த ஆட்டம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற சீன அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.

ஆனால், மலேசிய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சீன அணி நிலைகுலைந்தது. அந்த அணி, 11.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 23 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் மலேசிய அணியின் பந்துவீச்சாளர் சியாஸ்ரூல் இட்ரஸ் 7 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார். இந்த ஆட்டத்தில் 4 ஓவர்களை வீசிய இட்ரஸ், வெறும் 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதனையடுத்து, எளிதான இலக்கைத் துரத்திய மலேசியா 4.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.

இதன் மூலம் சியரா லியோனுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் 5 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்திய நைஜீரிய வீரரான பீட்டர் ஆஹொவின் சாதனையை இட்ரஸ் முறியடித்துள்ளார். அதுபோல் கடந்த 2019இல் வங்கதேசத்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் தீபக் சாஹர் 7 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார். இதே சாதனையை லெசோதோவுக்கு எதிரான ஆட்டத்தில் உகாண்டா வீரரான தினேஷ் நக்ரானி 2021இல் படைத்திருந்தார்.

இவர்களைத் தவிர யுஸ்வேந்திர சாஹல் (இந்தியா), ஆஷ்டன் அகர் (ஆஸ்திரேலியா) அஜந்தா மெண்டிஸ் (இலங்கை) உள்ளிட்ட வீரர்களும் டி20யில் 6 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர். ஆடவர் டி20யில் இதுவரை மொத்தம் 12 பந்துவீச்சாளர்கள் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். 7 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் இவர்கள் அனைவரையும் பின் தள்ளியுள்ளார் இட்ரஸ்.

Frederique Overdijk

அதேநேரத்தில், பெண்கள் டி20 போட்டிகளில் நெதர்லாந்தின் ஃபிரடெரிக் ஓவர்டிக் மற்றும் அர்ஜென்டினாவின் அலிசன் ஸ்டாக்ஸ் ஆகியோர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.