MPL: Solapur Royals vs Kolhapur Tuskers
MPL: Solapur Royals vs Kolhapur Tuskers @@FanCode Twitter
கிரிக்கெட்

வீடியோ: ‘ரன் அவுட் பண்ண த்ரோ செய்ய தேவையில்ல போல..’ மின்னல் வேகத்தில் ஓடி ஸ்டம்பிங் செய்த வீரர்

சங்கீதா

மகாராஷ்டிரா ப்ரீமியர் லீக் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் 8-வது ஆட்டத்தில், சோலாப்பூர் ராயல்ஸ் மற்றும் கோல்ஹாப்பூர் டஸ்க்கர்ஸ் அணிகள் நேற்று மோதின. புனே நகரில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், சோலாப்பூர் ராயல்ஸ் அணி டாஸ் வென்றதை அடுத்து பௌலிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய கோல்ஹாப்பூர் டஸ்க்கர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்திருந்தனர். அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கேதர் ஜாதவ் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உள்பட 85 ரன்களும், அன்கித் பாவ்னே 63 ரன்களும் எடுத்து அணிக்கு வலு சேர்த்திருந்தனர். எனினும், பின்பு வந்த பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சோலாப்பூர் ராயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தனர். இந்தப் போட்டியில், சோலாப்பூர் ராயல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரரான யாஷ் நாஹர் ரன் அவுட் ஆன விதம் தான் தற்போது வைரலாகி வருகிறது. கோல்ஹாப்பூர் டஸ்க்கர்ஸ் அணியின் பௌலர் அட்மன் போர் 4-வது ஓவரை வீச வந்தார். அப்போது, 4-வது ஓவரின் மூன்றாவது பந்தை அட்மன் போர் வீசுகையில், ஸ்ட்ரைக்கரிலிருந்த யாஷ் நாஹர் ரன் எடுப்பதற்காக எதிர் திசையில் ஓடினார்.

அப்போது பந்து கோல்ஹாப்பூர் டஸ்க்கர்ஸ் அணியின் ஃபீல்டர் சித்தார்த் மாத்ரே பக்கத்தில் வந்தபோது உடனடியாக பந்தை எடுத்து அங்கிருந்து ஸ்டம்ப்புக்கு த்ரோ செய்யாமல், பேட்டரை காட்டிலும் வேகமாக ஓடிச் சென்று ஸ்டம்ப் அவுட் செய்தார். சித்தார்த் மாத்ரே கையில் பந்து கிடைத்ததும், ஸ்ட்ரைக்கருக்கு யாஷ் நாஹர் திரும்பி ஓடிவந்தாலும், அவர் ஓடி வருவதற்குள் மின்னல் வேகத்தில் சித்தார்த் மாத்ரே ஓடிச் சென்று ஸ்டம்பிங் செய்தது வைரலாகி வருகிறது. யாஷ் நாஹர் 9 பந்துகளை சந்தித்து 8 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.