MS Dhoni
MS Dhoni File Image
கிரிக்கெட்

HBD Dhoni | ‘தல’ தோனியிடருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 7 வாழ்க்கைப் பாடங்கள்!

Justindurai S

இன்று இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபர்களில் ஒருவராக மகேந்திரசிங் தோனி இருக்கிறார். தனது வாழ்க்கை முழுவதுமே பலருக்கும் அவர் உந்துசக்தியாக இருந்துள்ளார். பலரும் தோனியை தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில், விளையாட்டில், தொழிலில் ரோல் மாடலாக கருதுகிறார்கள். மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய விடா முயற்சி மற்றும் கடுமையான உழைப்பால் பல சாதனைகளை படைத்துள்ளார். நம் வாழ்க்கைக்கு தேவையான சில பாடங்களை தோனியிடமிருந்து கற்றுக் கொள்வோம், வாருங்கள்…

MS Dhoni

1. கற்றுக் கொள்வதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். எப்போதும் கடுமையான உழைப்பை கொடுக்க தயங்காதீர்கள்

கற்பது என்பது தொடர்ச்சியான செயல்முறை. அதற்கு முடிவே இல்லை. தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் எப்படி தொடர்ந்து கற்றுக் கொண்டே இருந்தேன் என்பதை பலமுறை நமக்கு தோனி காண்பித்துள்ளார். ஆரம்பத்தில் அவர் அதிரடி பேட்ஸ்மேனாக இருந்தார். பின்னர் தன்னுடைய பேட்டிங் ஸ்டைலை மாற்றி நிலைத்து நின்று ஆடக் கூடியவராகவும் போட்டியை முடித்துக் கொடுக்கும் பினிஷர் ரோலிலும் தன்னை தகவமைத்துக் கொண்டார்.

இன்னொரு உதாரணத்தையும் கூறலாம். ஒரு சிலர் இதை கவனித்திருக்கலாம். ஆரம்பக் காலகட்டத்தில் தோனியின் விக்கெட் கீப்பீங் அவ்வுளவு சிறப்பாக இருக்காது. ஆனால் அவர் சும்மா இருக்கவில்லை. கீப்பிங்கில் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டார். இன்று கிரிக்கெட் உலகிலேயே விரைவான, சமர்த்தியமான விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார் தோனி.

கடுமையான உழைப்பிற்கு ஒரு சிறந்த உதாரணம் கூற வேண்டுமென்றால், அது தோனியின் வாழ்க்கைப் பயணமாகத்தான் இருக்கும். சிறு வயதாக இருக்கும் போது காலையிலிருந்து மாலை வரை பள்ளிக்குச் செல்லும் தோனி, மாலையில் தீவிர கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்வார். ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரியும் போது கூட, தனது கிரிக்கெட் பயிற்சியை அவர் கைவிடவில்லை. ஒரு முழுமையான கிரிக்கெட் வீரனாக தயாராக வேண்டும் என்பதற்காக தன்னுடைய ஓய்வு நேரம் முழுவதையும் கிரிக்கெட் பயிற்சிக்கு அர்ப்பணித்துக் கொண்டார். ஒருபோதும் அவர் கற்பதை நிறுத்திக் கொள்ளவில்லை.

ஆகவே, ஒருபோதும் கற்றுக்கொள்வதையும் முயற்சி செய்வதையும் நிறுத்தாதீர்கள்.

MS Dhoni

2. பதட்டமான சூழலில் அமைதியாக இருங்கள்; அதிகம் யோசிக்காதீர்கள்!

நமது தனிப்பட்ட வாழ்க்கையிலோ அல்லது தொழிலிலோ பல மோசமான சூழல்களை நாம் சந்தித்திருப்போம். இத்தகைய சூழலை நாம் தனியாக கையாள வேண்டியிருக்கும். இதுபோன்ற சூழலுக்கு தோனியை நாம் சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தத் திறமையை பலமுறை பல போட்டிகளில் நமக்கு நிரூபித்துக் காட்டியுள்ளார் அவர். அதற்கு சிறந்த உதாரணம் 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டி. அன்று இரவு கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவுகளை அவர் தனது தோளில் சுமந்துக் கொண்டிருந்தார். அதை நினைத்து அவர் பதட்டப்படவில்லை. அவரது கவனம் முழுவதும் ஆட்டத்தில் தான் இருந்தது. இறுதியில் எல்லாவற்றையும் சமாளித்து அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்.

அதுமட்டுமல்லாமல், போட்டியின் போது விக்கெட் கீப்பிங் நிற்கையில், பிரஷர் அனைத்தும் தன்னுடைய அணியினரை பாதிக்காமல் அற்புதமாக வழி நடத்திச் செல்வார். பவுலிங் அல்லது ஃபீல்டிங்கில் தான் கொடுத்த பணியை அவர்கள் ஒழுங்காக செயல்படுத்துகிறார்களா என்பதில் தான் அவரது கவனம் முழுதும் இருக்கும். “போட்டியின் முடிவை பற்றி ஒருபோதும் யோசிக்காதே; அடுத்து வரப் போகும் பந்தை மட்டும் யோசி” என்பதுதான் தோனியின் தாரக மந்திரம். இதை முறையாக பின்பற்றினாலே நாம் எதிர்பார்த்த முடிவுகளை அடைய முடியும்.

ஆகவே, எப்போதும் “கேப்டன் கூல்” தோனியின் தாரக மந்திரத்தை பின்பற்றி, வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளித்து வெளியே வாருங்கள். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அமைதியாக இருங்கள். எந்த சூழ்நிலையிலும் அமைதியாக இருக்க வேண்டும் என்பதுதான் தோனியிடமிருந்து நாம் கற்க வேண்டிய முக்கியமான பாடம்.

MS Dhoni

3. ஒருபோதும் எதற்காகவும் யாருக்காகவும் உங்கள் கவனத்தை சிதற விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் எதை சாதிக்க வேண்டும் என நினைக்கிறோமோ, அதில் தான் நமது கவனம் முழுவதும் இருக்க வேண்டும். இதைக் கடைபிடிப்பது கொஞ்சம் சவாலானது. நாம் சாதிக்க வேண்டிய விஷயத்தை விட்டுவிட்டு தேவையில்லாத பல விஷயங்களில் ஈடுபடுவோம். எதற்கு முக்கியத்துவமும் கவனமும் கொடுக்க வேண்டும் என்பது நம் கையில் தான் இருக்கிறது.

இதேப்போன்ற ஒரு சூழலை தோனியும் சந்தித்தார். சாம்பியன்ஸ் டிராபி நடைபெறும் சமயத்தில் தான் ஐபிஎல் சூதாட்ட சர்ச்சை வெடித்தது. ஆனால் அவர் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. எப்படி சாம்பியன்ஸ் டிராபியை வெல்லலாம் என்பதில் தான் அவரது கவனம் முழுவதும் இருந்தது. அதில் வெற்றியும் பெற்றார்.

இன்னொரு உதாரணத்தையும் கூற வேண்டும். அவரது கவனம் எந்தளவிற்கு கூர்மையாக உள்ளது என்பதை ‘எம்.எஸ் தோனி: சொல்லபடாத கதை’ என்ற படத்தின் மூலம் நாம் தெரிந்து கொண்டோம். அந்தப் படத்தில் ஒரு காட்சி உள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது அவரது அணியினர் அனைவரும் யுவராஜின் பேட்டிங் திறமையை ரசித்துக் கொண்டே ஃபீல்டிங்கில் கவனம் செலுத்தாமல் இருப்பார்கள். ஆனால் தோனி அப்படிபட்டவர் அல்ல. அதேப் போட்டியில் தன்னுடைய அதிரடி பேட்டிங் திறமையால் யுவராஜ் சிங்கையே திரும்பி பார்க்க வைத்தார்.

ஆகையால் நாம் யாருக்காகவும் எதற்காகவும் நமது கவனத்தை சிதறவிடக் கூடாது. நமது கவனம் முழுவதும் சாதிப்பதில் தான் இருக்க வேண்டும்.

MS Dhoni

4. தன்னம்பிக்கையோடு இருங்கள்; உங்கள் மீது நம்பிக்கை வைத்திருங்கள்

நம் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால், நாம் முதலில் வளர்த்துக்கொள்ள வேண்டிய பண்பு தன்னம்பிக்கை. மோசமான காலக்கட்டங்களில் கூட உங்களின் தன்னம்பிக்கை குறையக்கூடாது. இதற்கு தோனியின் வாழ்க்கை சிறந்த உதாரணமாக திகழ்கிறது.

ஆரம்பக் காலத்தில் ரஞ்சி போட்டிகளில் கலந்து கொண்டு தொடர்ச்சியாக ரன்களை குவித்து வந்தார் தோனி. ஆனாலும் அவரால் இந்திய அணியில் தேர்வாக முடியவில்லை. அதன்பின்னர் ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியில் சேர்ந்த போதும், தன் திறமை மீது அவர் ஒருபோதும் சந்தேகம் கொள்ளவில்லை. தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக் கொண்டார். தன்னுடைய கடும் உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையால் இந்திய அணிக்கு தேர்வானார். அதன்பிறகு தோனிக்கு ஏறுமுகம் தான்.

நம் திறமைகள் மீது கேள்விகள் வைக்கப்படும்; நமது உழைப்பு மீது சந்தேகம் கொள்வார்கள். இதெல்லாம் கடந்துதான் அனைவரும் வந்திருப்போம். ஆனாலும் ஒருபோதும் நம் தன்னம்பிக்கையை கைவிடக் கூடாது. நம்மேல் நமக்கு நம்பிக்கை இருந்தால் தான் நம்மால் பல உயரங்களை எட்ட முடியும். பல சாதனைகளை படைக்க முடியும்.

MS Dhoni

5. தலைவனாக வழிநடத்துங்கள்

2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் தோனியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. ஆனால் இறுதிப் போட்டியில் அவரின் செயல்பாடு அனைத்தையும் மறக்கடிக்கச் செய்துவிட்டது. இறுதிப் போட்டியில் சவாலான இலக்கை நம் அணிக்கு இலங்கை அணி நிர்ணயித்திருந்தது. அந்த தொடர் முழுவதும் யுவராஜ் சிங் சிறப்பான ஃபார்மில் இருந்தார். வழக்கமாக யுவராஜ் சிங்கிற்கு அடுத்தே தோனி இறங்குவார். ஆனால் அன்று யுவராஜ் சிங் இறங்குவதற்கு பதிலாக, அந்த இடத்தில் தோனி களமிறங்கினார். ஏனென்றால் அவரால் முரளிதரனின் சுழற்பந்தை எளிதாக கையாள முடியும். அதோடு கடைசி வரை நிலைத்து நின்றும் ஆட முடியும்.

அந்த இன்னிங்ஸ் முழுவதுமே அவர் எதிரணி பவுலர்களை எளிதாக சமாளித்து, கடைசி வரை விக்கெட்டை பறிகொடுக்காமல் இந்திய அணிக்கு வெற்றியையும் உலகக் கோப்பையையும் பெற்று தந்தார்

தோனியிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான வாழ்க்கை பாடம் இதுவாகும். நம் வாழ்க்கையில், பல மோசமான சூழல்களை சந்தித்திருப்போம். ஒரு விஷயத்தை பொறுப்பெடுத்து நம் தலைமையில் செய்ய வேண்டிய சூழல் நமக்கு வாய்த்திருக்கும். இத்தகைய சூழலை எதிர்கொள்ள கூச்சப்படாதீர்கள். தைரியமாக அதை எதிர்கொள்ளுங்கள். என்ன நடந்தாலும் அதற்கு நான் தான் பொறுப்பு எனக் கூறுங்கள். உங்கள் குழுவிற்கு தலைமையேற்று அனைவருக்கும் உதாரணமாக திகழுங்கள்.

Dhoni

6. எதையும் துணிந்து செய்யுங்கள்; உங்கள் உள்ளுணர்வு சொல்வதை கேளுங்கள்

உங்கள் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என விரும்பினால், முதலில் நம் உள்ளுணர்வு கூறுகிறபடி நடக்க வேண்டும்; அடுத்ததாக எதிலும் அச்சமின்றி துணிவோடு களமிறங்க வேண்டும். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதை பலமுறை நமக்கு காண்பித்துள்ளார் தோனி. அவர் எப்போதும் தன்னுடைய உள்ளுணர்வு சொல்வதை கேட்பவர். ரிஸ்க் எடுப்பதெல்லாம் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல். 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக் கோப்பை இறுதிப் போட்டியில் இதைக் கண்கூடாக நாம் கண்டோம். இதைவிட சிறந்த உதாரணம் தேவையா என்ன?

அப்போட்டியின் இறுதி ஓவர் யார் வீசுவது எனத் தெரியாமல் இருந்தது. அனுபவம் வாய்ந்த ஹர்பஜன் சிங்குக்கு ஒரு ஓவர் மீதமிருந்தது. ஆனால் கேப்டன் தோனியோ யாரும் எதிர்பார்க்காத வகையில் அனுபவம் குறைவான ஜோகிந்தர் ஷர்மாவை இறுதி ஓவர் வீச அழைத்தார். அன்று அவர் தனது உள்ளுணர்வை நம்பி, துணிவான முடிவை எடுத்தார். அந்த துணிவு தான் நமக்கு உலகக் கோப்பையை பெற்று தந்தது.

ஆகவே உங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் ‘ரிஸ்க்’ எடுக்க தயங்காதீர்கள். முடிவு எடுத்த பின்பு அதன் பின்விளைவுகள் குறித்து யோசித்துப் பார்க்காதீர்கள். இதை என்றும் உங்கள் மனதில் நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

MS DHONI / 3 ICC Trophies

7. எளிமையாக இருங்கள்

தோனி தனது வாழ்க்கையில் பல வெற்றிகளை ருசித்துள்ளார். ஆனால் இந்த வெற்றிகளும் புகழ் மாலைகளும் ஒருபோதும் தன்னை கட்டுப்படுத்தாமல் பார்த்துக் கொள்வார். தான் எந்தச் சூழ்நிலையிலிருந்து வந்தோம் என்பதை அவர் ஒருபோதும் மறந்ததில்லை. தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் உதவிய நண்பர்களோடு இன்றும் நேரத்தை செலவழிக்கிறார். நமக்கு தேவையான முக்கியமான பாடம் ஒன்று இதிலுள்ளது.

நம்மில் பலரும் வாழ்க்கையில் வெற்றி பெற்றதும் நமக்கு உதவிய நண்பர்களை மறந்து விடுகிறோம். ஒரு சிலர் தாங்கள் எந்தச் சூழலில் இருந்து வந்தோம், தங்கள் கடந்த காலம் குறித்து எல்லாம் மறந்து விடுகிறார்கள். நீங்கள் வாழ்க்கையில் எவ்வுளவு உயரத்திற்குச் சென்றாலும் எளிமையை கடைபிடியுங்கள்.

நம்மைப் போன்ற பலருக்கும் தோனி ரோல் மாடலாக இருக்கிறார். தோனியிடமிருந்து நாம் பெற்றுள்ள இந்த வாழ்க்கை பாடங்கள், உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.