ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 இரண்டு அணிகளிலும் ஹர்சித் ரானா இடம்பெற்றிருப்பதை முன்னாள் இந்திய கேப்டன் விமர்சித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடவிருக்கிறது.
அக்டோபர் 19 முதல் நவம்பர் 08 வரை போட்டிகள் நடைபெறவிருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள், டி20 இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் ஒருநாள் அணிக்கும் சுப்மன் கில்லே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த இரண்டு அணியிலும் பல வீரர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில், ஹர்சித் ரானா இரண்டு அணியிலும் இடம்பெற்றிருப்பதை முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.
எதன் அடிப்படையில் ஹர்சித் ரானாவை ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் தேர்ந்தெடுத்தார்கள் என தன்னுடைய யூடியூப் சேனலில் விமர்சித்துள்ளார் சீக்கா.
அவருடைய வீடியோவில் பேசியிருக்கும் அவர், “சாம்பியன்ஸ் டிராபியை வென்றுக்கொடுத்த ரவீந்திர ஜடேஜா மற்றும் வருண் சக்கரவர்த்தியை எப்படி உங்களால் அணியிலிருந்து நீக்க முடியும். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் போது வருண் சக்கரவர்த்தியை எல்லோரும் பாராட்டினார்கள். ஒருபக்கம் வருண், மற்றொரு பக்கம் ஜடேஜா என சிறப்பாக வீசினார்கள். ஜடேஜா ஒரு ஆல்ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டார்.
ஹர்சித் ரானா அணியில் நிரந்தர இடம்பிடித்துவிட்டார், கவுதம் கம்பீரின் விரும்பமான வீரர் போல. அணிக்கான முதல் பெயரே ஹர்சித் ரானா பெயரை தான் எழுதுவார்கள் போல. முதல்ல சுப்மன் கில் பெயர், அதற்குபிறகு ஹர்சித் ரானா பெயர்னு பட்டியல் போட்டிருப்பார்கள் போல” என கடுமையாக விமர்சித்துள்ளார்.