ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தடுமாற்றத்துடன் தொடங்கியுள்ளது.. நீண்ட இடைவெளிக்கு பிறகு கிரிக்கெட் களத்திற்கு திரும்பிய விராட் கோலி 0 ரன்னிலும், ரோகித் சர்மா 8 ரன்னிலும் அவுட்டாகினர்..
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடிவருகிறது..
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் பற்றியும், 2027 உலகக்கோப்பைக்கு தகுதிபெறுவார்களா என்பது பற்றியும் விவாதம் இருந்துவரும் நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது.
பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா ஒரு பவுண்டரியுடன் 8 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்துவந்த விராட் கோலி 0 ரன்னில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.
அடுத்தடுத்த விக்கெட்டுகள் சரிய களத்தில் நின்ற இந்திய கேப்டன் சுப்மன் கில்லும் 10 ரன்னுக்கு வெளியேறி ஏமாற்றினார். களத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் நீடிக்கும் நிலையில், 37/3 என்ற நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டுள்ளது.