kl rahul - jadeja
kl rahul - jadeja Twitter
கிரிக்கெட்

”கே.எல்.ராகுலுக்கு இல்ல எனக்கு தான் மெடல்” - ஃபீல்டிங் கோச்சை பார்த்து சைகை செய்த ரவீந்திர ஜடேஜா!

Rishan Vengai

நடப்பு உலகக்கோப்பையில் தனது 4வது லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து விளையாடி வருகிறது இந்திய அணி. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணி நிர்ணயித்த 257 ரன்களை 41.3 ஓவர்களில் எட்டியது இந்தியா.

ஒரு ஸ்டன்னிங் கேட்ச் எடுத்த கேஎல் ராகுல்!

நடப்பு உலகக்கோப்பையை பொறுத்தவரையில் மற்ற அனைத்து உலகக்கோப்பையை விடவும் இந்திய அணி ஃபீல்டிங்கில் கலக்கி வருகிறது. சமீபத்தில் ஐசிசி வெளியிட்ட முதல் ஒருவாரத்திற்கான சிறந்த ஃபீல்டர்களில் விராட் கோலி முதலிடம் பிடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் இன்றைய போட்டியிலும் இந்திய வீரர்கள் கேஎல் ராகுல், ஜடேஜா, குல்தீப் யாதவ் மூன்று வீரர்களும் களத்தில் ரசிகர்களை தங்களுடைய அபாரமான ஃபீல்டிங்கின் மூலம் குஷிப்படுத்தினர்.

இன்றைய போட்டியில் 25வது ஓவரை வீச வந்த முகமது சிராஜ் மெஹிதி ஹாசனுக்கு எதிராக லெக் சைடில் ஒரு பவுன்சரை வீசினார். அதை எதிர்கொண்டு விளையாடிய மெஹிதி ஹாசன் பந்தை தொட்டுவிட, பந்து கீப்பரை கடந்து ஒயிடாக சென்றது. ஆனால் வெறும் 0.78 நொடிகளில் பந்தை நோக்கி தாவிய விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் பறவையை போல் பறந்து ஒரு நம்பமுடியாத கேட்ச்சை எடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதில் சிறப்பு என்னவென்றால் பந்து கீப்பரை கடந்த பிறகு பின்பக்கமாய் தாவிய அவர் லாவகமாக கையில் எடுத்தார்.

ஒருபக்கம் கேஎல் ராகுல் என்றால், மறுபக்கம் ரவீந்திர ஜடேஜா!

கேஎல் ராகுல் எடுத்த அற்புதமான கேட்ச்சை தொடர்ந்து, ரவீந்திர ஜடேஜாவும் முஸ்ஃபிகூர் ரஹிமின் கேட்ச்சை பறந்து டைவ் செய்து எடுத்தார். விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழ நிலைத்து நின்று விளையாடிய ரஹிம், கடைசி நேரத்தில் அதிரடியான பேட்டிங்கிற்கு திரும்பினார். பும்ரா வீசிய 43வது ஓவரில் 3வது பந்தை ஆஃப் சைடில் காற்றில் அடித்தார் ரஹிம், மின்னல் வேகத்தில் பறந்த பந்தை கவரில் இருந்த ஜடேஜா தாவி பிடித்து எடுத்து வீசினார்.

Jadeja

பந்தை பிடித்த பிறகு ஜடேஜா செய்த செயல் தான் ரசிக்கும்படியாக அமைந்தது. கேட்ச் எடுத்த பிறகு தன்னுடைய ஃபீல்டிங் கோச்சை பார்த்து சிறந்த ஃபீல்டருக்கான விருது கேஎல் ராகுலுக்கு இல்ல எனக்கு தான் தரணும் என்பது போல், மெடலை கழுத்தில் மாட்டுவது போல் சைகையளித்தார். முதல் இன்னிங்ஸ் முடிந்த பிறகு அதை ஃபீல்டிங் கோச்சுக்கு செய்து காட்டியதாக ஜடேஜா சிரித்தபடி கூறினார்.

கேஎல் ராகுல், ஜடேஜாவை தொடர்ந்து இடதுகை ஸ்பின்னரான குல்தீப் யாதவும் களத்தில் பல சிறப்பான ஃபீல்டிங்கில் கவனம் ஈர்த்தார். இந்த 3 வீரர்களில் இன்றைக்கு யார் சிறந்த ஃபீல்டருக்கான மெடலை வாங்க போகிறார்கள் என்று போட்டி முடிந்ததும் தெரிந்துவிடும்.

அது என்ன ஃபீல்டருக்கான மெடல்?

இந்திய அணியின் ஃபீல்டிங் கோச்சான திலீப், வீரர்களை களத்தில் உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக, போட்டியில் சிறப்பாக செயல்படும் ஃபீல்டர்களுக்கு போட்டி முடிந்த பிறகு மெடல் வழங்குவதை தொடங்கி வைத்துள்ளார்.

virat kohli

கடந்த 3 போட்டிகளில் சிறப்பாக ஃபீல்டிங் செய்ததற்காக முதல் போட்டியில் விராட் கோலிக்கும், இரண்டாவது போட்டியில் ஷர்துல் தாக்கூருக்கும், 3வது போட்டியில் கேஎல் ராகுலுக்கும் சிறந்த ஃபீல்டருக்கான மெடல் வழங்கப்பட்டது.