kl rahul scored century against england lions web
கிரிக்கெட்

IND A v ENG A| கேஎல் ராகுல் அசத்தல் சதம்.. முதல் இன்னிங்ஸில் 348 ரன்கள் அடித்த இந்தியா!

இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சமனான நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்றுவருகிறது.

Rishan Vengai

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய அணி ’ஜுன் 13 முதல் ஆக்ஸ்ட் 4’ வரை 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த நிலையில், சுப்மன் கில் தலைமையிலான புதிய இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடவிருக்கிறது.

இந்த சூழலில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்தியா ஏ அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது.

கருண் நாயர்

முதல் டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் இரட்டை சதமடிக்க 557 ரன்கள் குவித்தது இந்தியா. பதிலுக்கு இங்கிலாந்து லயன்ஸ் அணியும் 587 ரன்கள் குவிக்க ஆட்டம் சமன்செய்யப்பட்டது.

இந்நிலையில் இரண்டு அணிக்கும் இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்துவருகிறது.

கேஎல் ராகுல் சதம்.. 348 ரன்கள் சேர்த்த இந்தியா!

நார்த்தாம்டன் கவுன்டி மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவரும் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 348 ரன்கள் சேர்த்துள்ளது.

தொடக்க வீரராக களமிறங்கி அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் 15 பவுண்டரிகள் 1 சிக்சர் உதவியுடன் 116 ரன்கள் அடித்து அசத்தினார். கருண் நாயர் 40 ரன்னும், துருவ் ஜுரல் அரைசதமும் அடிக்க முதல் இன்னிங்ஸில் 348 ரன்கள் சேர்த்துள்ளது இந்தியா ஏ அணி.