KL Rahul
KL Rahul cricinfo
கிரிக்கெட்

“எத்தனை வெற்றிகள் பெற்றாலும் ஓய்வுக்கு பின் உலகக் கோப்பை தான் நம் நினைவில் இருக்கும்”- கே.எல்.ராகுல்

Rishan Vengai

2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியானது ஒவ்வொரு இந்திய வீரருக்குள்ளும் ஆறாத காயமாகவே இருந்து வருகிறது. சொந்த மண்ணில் கிட்டத்தட்ட பாதி கையால் கோப்பையை எடுத்துவிட்ட நிலையில், கடைசிநேரத்தில் தோல்வியை தழுவியது இடியையே இறக்கியது போல் இருந்தது. ஒவ்வொரு இந்திய ரசிகருக்குமே இந்த தோல்வி ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருந்துவரும் நிலையில், வீரர்களின் மனதிடம் மோசமாகவே இருந்துவருகிறது.

செய்தியாளர் சந்திப்பையே வேண்டாம் என மறுத்துவிட்ட இந்திய கேப்டன் ரோகித் சர்மா, 15 நாட்கள் கழித்து பேசும் போதும் “உலகக்கோப்பை வெல்லாததை மற்ற எந்த வெற்றியும் ஈடுகொடுத்துவிடாது. அப்படி உலகக்கோப்பையை எந்த வெற்றியோடும் ஒப்பிட முடியாது, உலகக்கோப்பை என்பது உலகக்கோப்பை மட்டும் தான்” என உருக்கமாக பேசியிருந்தார்.

இந்நிலையில் தான் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலும் உலகக்கோப்பை தோல்வி குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஓய்விற்கு பின் உலகக்கோப்பை தான் நம் நினைவில் இருக்கும்! - கேஎல் ராகுல்

உலகக்கோப்பைக்கு முன் 2023 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் காயமடைந்த கேஎல் ராகுல், அறுவைசிகிச்சைக்கு தள்ளப்பட்டார். இதனால் ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாடாத அவர், அதற்கு பிறகான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் விளையாட முடியாமல் போனார்.

kl rahul

அவரால் 6 மாதங்களுக்கு திரும்பி வர முடியாது என கூறப்பட்டது. உலகக்கோப்பையில் பங்கேற்பதும் கடினமென கூறப்பட்டது. ஆனால் கடினமான உழைப்பை போட்டு சிறப்பான ஃபார்முடன் திரும்பி வந்த ராகுல், பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக்கோப்பை போட்டியில் சதமடித்து அசத்தினார். தொடர்ந்து உலகக்கோப்பையிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல், 2 அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் 452 ரன்கள் அடித்தார்.

KL Rahul

உலகக்கோப்பை தோல்விகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸின் 'பிலீவ்' நிகழ்ச்சியில் பேசியிருக்கும் கேஎல் ராகுல், “ 10 ஆண்டுகள் அல்லது 15 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் ஓய்வு பெறும்போது, ​​எங்கள் நினைவில் நிற்கபோவதெல்லாம் நாங்கள் எடுத்த ரன்களோ அல்லது வீழ்த்திய விக்கெட்டுகளோ அல்லது நாங்கள் வென்ற இருதரப்பு தொடர் வெற்றிகளோ இல்லை. எங்கள் நினைவில் வந்து முதலில் நிற்கப்போவதெல்லாம் உலகக்கோப்பை வெற்றி மட்டுமே. அதனால் அணியின் ஒவ்வொரு வீரருக்கும் உலகக் கோப்பையை கையில் ஏந்துவது மட்டுமே தேவையான ஒன்று. இந்தமுறை ஏற்பட்ட தோல்வியால், அடுத்த முறை உலகக்கோப்பையை எட்டிப்பிடித்து இரண்டு படிகள் மேலே செல்வதற்கு எங்களுக்குள் கூடுதல் நெருப்பு இருக்கிறது” என கேஎல் ராகுல் கூறியுள்ளார்.