இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணியில் அங்கமாக இருந்துவரும் கேஎல் ராகுல், பேட்டிங்கில் தன்னுடைய சிறந்த ஃபார்மை வெளிப்படுத்தியுள்ளார்.
தொடக்க வீரராக களமிறங்கி 2 சதங்கள், 2 அரைசதங்கள், ஒரு 90 ரன்கள் என தரமான ஆட்டத்தை ஆடியிருக்கும ராகுல், 500 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.அ
5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றிருக்கும் நிலையில், கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளும் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
நடப்பு டெஸ்ட் தொடரில் தொடக்க வீரராக 10 இன்னிங்ஸ்களில் விளையாடியிருக்கும் கேஎல் ராகுல், 53 சராசரியுடன் 532 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இவருடைய அதிகபட்ச ஸ்கோர் 137.
இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் 500 ரன்கள் அடித்த இரண்டாவது இந்திய தொடக்க வீரர் என்ற சாதனையை படைத்திருக்கும் கேஎல் ராகுல், அதிகபட்ச ரன்கள் குவித்த முதல் வீரராக மாறும் சாதனையை 10 ரன்னில தவறவிட்டார்.
1979-ம் ஆண்டு இங்கிலாந்து தொடரில் 542 ரன்கள் குவித்த சுனில் கவாஸ்கர், இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்கள் அடித்த இந்திய தொடக்க வீரராக முதலிடத்தில் நீடிக்கிறார். அவருடைய சாதனையை முறியடிக்க இன்னும் 10 ரன்களே மீதமிருந்த நிலையில் 5வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 7 ரன்னில் வெளியேற ராகுல் நல்ல வாய்ப்பை தவறவிட்டார்.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 75/2 என்ற நிலையில் பேட்டிங் செய்துவருகிறது.