kerala qualified 2024-2025 ranji trophy semi final x
கிரிக்கெட்

ரஞ்சிக்கோப்பை | 1 ரன்னில் அரையிறுதிக்கு முன்னேறிய கேரளா.. ஹீரோவாக மாறிய சல்மான் நிசார்!

ரஞ்சிக்கோப்பை காலிறுதிப்போட்டியில் 1 ரன் முன்னிலை பெற்றதன் மூலம் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது கேரளா அணி.

Rishan Vengai

2024-2025ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக்கோப்பை போட்டிகள் நடைபெற்றுவருகிறது. பரபரப்பாக நடந்துவந்த தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், காலிறுதி போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.

3 காலிறுதி போட்டிகள் முடிவுக்கு வந்த நிலையில், மும்பை, விதர்பா மற்றும் குஜராத் அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன.

இந்த சூழலில் மீதமிருக்கும் காலிறுதி போட்டியில் ஜம்மு காஷ்மீர் மற்றும் கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

சமனில் முடிந்த போட்டி.. 1 ரன்னில் தகுதிபெற்ற கேரளா!

பரபரப்பாக நடந்த போட்டியில் முதலில் விளையாடிய ஜம்மு காஷ்மீர் அணி 280 ரன்கள் சேர்த்தது. அதனைத்தொடர்ந்து விளையாடிய கேரளா அணி 11 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதற்குபிறகு சிறப்பாக விளையாடிய சக்சீனா அரைசதமடித்து அணியை மீட்க போராடினாலும், 67 ரன்னில் வெளியேற்றிய ஜம்மு காஷ்மீர் அணி 137 ரன்னுக்கே 7 விக்கெட்டை வீழ்த்தி வலுவான நிலையில் இருந்தது.

ஆனால் 6வது வீரராக களத்திற்கு வந்த சல்மான் நிசார் இறுதிவரை களத்தில் நின்று 112 ரன்கள் அடிக்க 1 ரன் முன்னிலை பெற்று 281 ரன்கள் சேர்த்தது கேரளா அணி. இந்த 1 ரன் தான் கேரளாவை அரையிறுதிக்கு போட்டிக்கு தகுதிபெற காரணமாக அமைந்துள்ளது.

1 ரன் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய ஜம்மு காஷ்மீர் அணி 399/9 என்ற நிலையில் டிக்ளார் செய்தது. 399 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கேரளா அணி, 5வது நாள் ஆட்டம் முடிவில் ஆல் அவுட்டாகாமல் 295/6 என முடித்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது. இரண்டாவது இன்னிங்ஸிலும் 162 பந்துகளை சந்தித்து 44 ரன்களுடன் நாட் அவுட்டில் இருந்தார் சல்மான் நிசார்.

போட்டி சமனில் முடிந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் லீட் எடுத்த அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. 1 ரன்னில் கேரளா முன்னிலை பெற்ற நிலையில், அரையிறுதிக்கு தகுதிபெற்றது. 112 ரன்களுடன் அவுட்டாகாமல் விளையாடிய சல்மான் நிசார் ஹீரோவாக மாறியுள்ளார்.

ரஞ்சிக்கோப்பை வரலாற்றில் 2வது முறையாக அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது கேரளா அணி. முதல்முறையாக 2018-2019 சீசனில் தகுதிபெற்றது கேரளா. வரும் பிப்ரவரி 17-ம் தேதியில் முதல் அரையிறுதியில் குஜராத்தை எதிர்கொள்கிறது கேரளா.