kerala qualified ranji trophy final web
கிரிக்கெட்

ரஞ்சிக் கோப்பை | காலிறுதியில் 1 ரன்.. அரையிறுதியில் 2 ரன்.. ஃபைனலுக்கு முன்னேறி வரலாறு படைத்த கேரளா!

2025 ரஞ்சிக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு கேரளா மற்றும் விதர்பா அணிகள் தகுதிபெற்றுள்ளன.

Rishan Vengai

2024-2025ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக்கோப்பை போட்டிகள் நடைபெற்றுவருகிறது. பரபரப்பாக நடந்துவந்த தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், அரையிறுதி போட்டிகள் முடிவை எட்டியுள்ளன.

அரையிறுதிப்போட்டியில் விதர்பா அணி நடப்பு சாம்பியன் மும்பை அணியையும், கேரளா அணி குஜராத் அணியையும் எதிர்கொண்டு விளையாடின.

kerala qualified 2024-2025 ranji trophy semi final

இதில் மும்பை அணியை வீழ்த்தி விதர்பா அணியும், குஜராத் அணியை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கேரளா அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன.

காலிறுதியில் 1 ரன்.. அரையிறுதியில் 2 ரன்..

காலிறுதியில் ஜம்மு காஷ்மீர் அணியை எதிர்த்து விளையாடிய கேரளா, முதல் இன்னிங்ஸில் ஜம்மு காஷ்மீர் அணியை விட 1 ரன் முன்னிலை பெற்றதால் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

இந்நிலையில், அரையிறுதியிலும் போட்டி சமனாகி 2 ரன்னில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது கேரளா அணி.

அரையிறுதியில் கேரளா அணி குஜராத் அணியை எதிர்த்து விளையாடியது. முதலில் விளையாடிய கேரளா, விக்கெட் கீப்பர் அசாரூதினின் 177 ரன்கள் ஆட்டத்தால் 457 ரன்கள் குவித்தது. இரண்டு நாட்களுக்கு பேட்டிங் செய்த கேரளா 457 ரன்கள் குவித்த நிலையில், இரண்டாவதாக பேட்டிங் செய்த குஜராத் 5வது நாள் காலை வரை முதல் இன்னிங்ஸில் ஆடியது.

455/9 விக்கெட்டுகள் என முக்கியமான கட்டத்திற்கு போட்டி செல்ல, 3 ரன்கள் அடித்தால் லீட் எடுத்து குஜராத் இறுதிப்போட்டிக்கு செல்லும். மீதமிருக்கும் 1 விக்கெட்டை வீழ்த்தினால் 2 ரன்னில் கேரளா இறுதிப்போட்டிக்கு செல்லும் என்ற நிலை இருந்தது.

அப்போது 10வது வீரராக பேட்டிங் செய்த குஜராத்தின் நாக்வாஸ்வாலா பந்தை பவுண்டரிக்கு விரட்டி வெற்றிக்கான ரன்களை எடுக்க முயற்சித்தார். வேகமாக பந்தை அடிக்க ஸ்லாக்-ஸ்வீப்பில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த வீரரின் ஹெல்மெட்டில் பந்துப்பட்டு எகிறியது. அதை ஸ்லிப்பில் நின்றிருந்த கேப்டன் சச்சின் பேபி பிடிக்க, அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது.

இந்த சூழலில் 2 ரன் வித்தியாசத்தில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது கேரளா. 1951-க்கு பின் 74 வருடங்களுக்கு பிறகு ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று வரலாறு படைத்துள்ளது கேரளா அணி.

மும்பை தோல்வி.. இறுதிப்போட்டியில் விதர்பா!

மற்றொரு அரையிறுதியில் நடப்பு சாம்பியன் மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது கருண் நாயரின் விதர்பா அணி.

முதலில் விளையாடிய விதர்பா அணி 383 & 292 ரன்கள் அடித்த நிலையில், இரண்டாவதாக விளையாடிய மும்பை அணி 270 & 325 ரன்களே எடுத்து 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.