ind vs pak web
கிரிக்கெட்

INDvPAK மோதல் | ”ஆசியக்கோப்பையில் இந்தியா விளையாடக் கூடாது..” - கேதார் ஜாதவ்

ஆசியக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடக் கூடாது என்று கேதார் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

2025 ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரானது வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது.

துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற உள்ள தொடரில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய அணிகள் உள்ள ஏ பிரிவில் பாகிஸ்தான் இடம் பெற்றள்ளது.

ind vs pak

குரூப் பி பிரிவில் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்தியா விளையாடவே கூடாது..

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், இருதரப்பிலான கிரிக்கெட் தொடர்களும் இனி நடைபெறாது எனக் கூறப்பட்டது. இதன் காரணமாக, நடப்பாண்டு ஆசியக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறுமா எனக் கேள்விகள் எழுந்தன.

இந்த நிலையில், திட்டமிட்டப்படி ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, இந்த தொடரில் ஒரே பிரிவில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளன. இதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 தொடங்கி செப்டம்பர் 28 வரை நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் இரண்டு அணிகளும் சேர்ந்து விளையாடுவதற்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவும் ஆசியக்கோப்பையில் இந்தியா விளையாடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

ஆசியக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மோதுவது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் கேதார் ஜாதவ், "இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் விளையாடவே கூடாதுன்னு நான் நினைக்கிறேன். இந்தியாவைப் பொறுத்தவரை, எங்கு விளையாடினாலும் வெற்றிபெறும். ஆனால் இந்தப் போட்டியை விளையாடவே கூடாது, இந்திய அணியும் விளையாட மாட்டாங்க. இதை நான் நம்பிக்கையாக கூறுகிறேன். ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு சிறந்த வெற்றி” என்று பேசியுள்ளார்.