india cricket team
india cricket team twitter
கிரிக்கெட்

உலகக்கோப்பைக்குப் பாதிப்பா? காயம்பட்ட வீரர்கள் தேர்வு குறித்து கபில் தேவ் எச்சரிக்கை!

Prakash J

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய 6 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தம் 13 போட்டிகளில் பாகிஸ்தானில் 4 போட்டிகளும், இலங்கையில் 9 போட்டிகளும் நடைபெறவுள்ளன. இந்த தொடருக்காக ரோகித் ஷர்மா தலைமையில் 17 அணி வீரர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர்.

கூடுதல் வீரராக, சஞ்சு சாம்சனின் பெயரும் இடம்பெற்றது. 17 பேர் பட்டியலில் காயத்தால் அவதிப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் கே.எல்.ராகுல் இன்னும் காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அணி வீரர்கள் தேர்வு விஷயத்தில் விமர்சனம் எழுந்துள்ளது.

இதுகுறித்து முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ், “விரைவில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வர இருக்கிறது. அது சில வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு செய்ய நல்ல வாய்ப்பாக அமையும். இருப்பினும் நான் பயப்படுவது குறிப்பிட்ட சில வீரர்கள் மீண்டும் உலகக் கோப்பை போட்டியின்போது காயமடைந்துவிடுவார்களோ என்றுதான். அப்படிநடந்தால் நிச்சயம் அது சரியான விஷயமாக இருக்காது. காயத்திலிருந்து திரும்பிய வீரர்களுக்கு நிச்சயம் ஆசியக் கோப்பை போட்டியில் இடம் வழங்க வேண்டும்.

உலகக்கோப்பை தொடருக்கு முன் அனைத்து வீரர்களையும் கண்டிப்பாக பரிசோதித்துக்கொள்வது நல்லது. ஏனென்றால் உலகக்கோப்பை தொடர் மிகவும் அருகில் வந்துவிட்டது. ஆனால் நீங்கள் இன்னும் சில வீரர்களுக்கு வாய்ப்பே கொடுக்கப்படவில்லை. உலகக்கோப்பை தொடரில் விளையாடும்போது சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்? ஒட்டுமொத்த அணியுமே அந்தப் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.

அவர்கள் தங்களுடைய உடல் தகுதியை நிரூபித்து விட்டார்கள் என்றால் நிச்சயமாக அவர்கள் உலகக் கோப்பையில் விளையாடலாம். இந்தியாவில் திறமைக்குப் பஞ்சமே கிடையாது. சில வீரர்கள் இன்னும் உடல்தகுதியைப் பெறவில்லை என்றால் உலகக்கோப்பை தொடருக்கு அவர்களைத் தேர்வு செய்யாமல் இருப்பதே நல்ல முடிவாக இருக்கும். உலகக் கோப்பைக்கான அணியை தயார் செய்வதற்கு ஆசியக் கோப்பை ஒரு நல்ல களமாக அமையும்.

இந்திய அணி வீரர்கள் ஆசியக் கோப்பை தொடரில் எதைப் பற்றியும் நினைக்காமல் தங்களுடைய திறமையை சுதந்திரமாக வெளிப்படுத்த வேண்டும். வீரர்களின் திறமையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவர்களை அணியில் வைத்துக்கொள்ள வேண்டாம். ஆசியக் கோப்பை இலங்கையிலும் உலகக்கோப்பை இந்தியாவிலும் நடைபெறுகிறது. எனினும் சிறந்த மற்றும் உடல் தகுதி உடைய அணியைத்தான் நீங்கள் தேர்வு செய்து விளையாட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.