vaibhav sooryavanshi ANI
கிரிக்கெட்

வைபவ் சூர்யவன்ஷியைப் பார்த்து கிண்டல்.. பாக். Ex வீரரிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட சயீம் அயூப்!

”சயீம் அயூப் ஒன்றும் குழந்தை அல்ல. இதுபோன்ற தேவையில்லாத செயல்களை விட்டுவிட்டு சொந்த ஆட்டத்தில் அவர் கவனம் செலுத்த வேண்டும்” என கம்ரான் அக்மல் கடுமையாகச் சாடியுள்ளார்.

Prakash J

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்ற நிலையில், அந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி பெவிலியன் திரும்பியபோது, அவரது சிறுவயதைக் கிண்டலடிக்கும் விதமாக பாகிஸ்தான் வீரர் சயீம் அயூப் சைகை செய்தார். சயீம் அயூப்பின் இந்த செயலுக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2026 ஆசிய விளையாட்டின் ஓர் அங்கமாக டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில், இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா இன்னொரு தங்கப் பதக்கத்தை வென்று வாகை சூடியது. இந்த நிலையில், இப்போட்டியில் விளையாடிய 15 வயது இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷியை களத்தில் கேலி செய்த பாகிஸ்தான் வீரர் சயீம் அயூப்பை, அந்நாட்டு முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் கடுமையாகச் சாடியுள்ளார். இப்போட்டியின் 3-ஆவது ஓவரில், 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை சயீம் அயூப் வீழ்த்தினார். அப்போது வைபவ் பெவிலியன் திரும்பியபோது, அவரது சிறுவயதைக் கிண்டலடிக்கும் விதமாக குழந்தையைத் தொட்டிலில் வைத்து ஆட்டுவதுபோல கைகளால் சைகை செய்து சயீம் அயூப் கேலி செய்தார். சயீம் அயூப்பின் இந்த செயலுக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

vaibhav sooryavanshi

இதுகுறித்து உரையாடல் நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், "எங்கள் அணியின் ஆட்டம் தொடர்ந்து படுமோசமாக உள்ளது. ஆனால், வீரர்கள் களத்தில் ஒழுங்காக விளையாடுவதை விட்டுவிட்டு, சமூக வலைதளங்களில் கவனம் பெறுவதற்காக மட்டுமே இத்தகைய அற்ப வேலைகளைச் செய்கிறார்கள். எதிரணி வீரருக்கு 13, 14 அல்லது 15 வயது இருக்கலாம். ஆனால் அவர் சர்வதேச கிரிக்கெட் விளையாடுகிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சயீம் அயூப் ஒன்றும் குழந்தை அல்ல. இதுபோன்ற தேவையில்லாத செயல்களை விட்டுவிட்டு சொந்த ஆட்டத்தில் அவர் கவனம் செலுத்த வேண்டும்” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.