200 வருடங்களுக்கு முன்பே கிரிக்கெட் ஊன்றிய பழமையான கிரிக்கெட் அணியாக இருந்தாலும், கோப்பை என்பது தென்னாப்பிரிக்காவிற்கு இதுவரை எட்டாக்கனியாகவே இருந்துவருகிறது. கிரிக்கெட் வரலாற்றில் பல ஏற்ற இறக்கங்களை கொண்ட அணியாக தென்னாப்பிரிக்கா இருந்துவருகிறது. 20 வருடங்கள் தடைக்குபிறகு 1991-ல் சர்வதேச கிரிக்கெட் மறுமலர்ச்சியை பெற்ற தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, 1998-ம் ஆண்டுநடைபெற்ற ஐசிசி நாக் அவுட் கோப்பை வென்றது. அதுதான் அவ்வணி வென்ற கடைசி மற்றும் ஒரே கோப்பையாக இன்றளவும் நீடித்துவருகிறது.
1992, 2003, 2015 உலகக்கோப்பை நாக் அவுட் போட்டிகள் என 3 முறை தோற்ற தென்னாப்பிரிக்கா அணி, 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிவரை முன்னேறி இந்தியாவிடம் தோற்று கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
இந்த சூழலில் கோப்பை வெல்லாத 27 வருடங்கள் காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில், 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடுகிறது தென்னாப்பிரிக்கா.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் பரபரப்பாக தொடங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்யுமாறு அழைத்தது.
பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் சரியாக பயன்படுத்தி கொண்ட தென்னாப்பிரிக்கா பவுலர்கள் ரபாடா மற்றும் யான்ஸன் இருவரும் விக்கெட் வேட்டை நடத்தினர். தொடக்க வீரராக களமிறங்கிய காவாஜாவை 0 ரன்னில் வெளியேற்றிய ரபாடா, காம்ரான் கிரீனை 4 ரன்னில் வெளியேற்றி அசத்தினர். அதற்குபிறகு வந்த டிராவிஸ் ஹெட் மற்றும் லபுசனே இருவரையும் வெளியேற்றிய யான்ஸன் மிரட்டிவிட்டார்.
67 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறிய அணியை ஆல்ரவுண்டர் வெப்ஸ்டருடன் சேர்ந்து மீட்டு எடுத்துவந்தார் ஸ்டீவன் ஸ்மித். இரண்டு வீரர்களும் அரைசதமடித்து அசத்த நல்ல டோட்டலை நோக்கி நகர்ந்தது ஆஸ்திரேலியா. ஆனால் கேப்டன்சியில் ஸ்மார்ட் மூவ் செய்த டெம்பா பவுமா, எய்டர்ன் மார்க்ரமின் கைகளில் பந்தை கொடுத்து ஸ்மித் விக்கெட்டை எடுத்துவந்தார்.
ஸ்மித் 66 ரன்கள் அடித்து வெளியேற, வெப்ஸ்டர் 72 ரன்கள் இருந்தபோது ரபாடா வெளியேற்றினார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 212 ரன்களுக்கு ஆல்அவுட்டானது ஆஸ்திரேலியா. தரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி ரபாடா 51 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதனைத்தொடர்ந்து விளையாடிவரும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திவரும் ஆஸ்திரேலியா அணி 25 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பதிலடி கொடுத்து வருகிறது.
* 2வது பவுலர் - இன்றைய போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ரபாடா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது பவுலராக நியூசிலாந்தின் கைல் ஜேமிசனுடன் இணைந்தார்.
*10 ஆண்டில் அதிக 5 விக்கெட்டுகள் - 2015-க்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் (17) அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக அசத்தியுள்ளார்.
* லார்ட்ஸ் மைதானம் - லார்ட்ஸ் மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய மோர்னே மோர்கல் (15) சாதனையை பின்னுக்கு தள்ளினார் (18) ரபாடா.
* ஆலன் டொனால்ட் சாதனை முறியடிப்பு - டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவிற்காக 330 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த ஜாம்பவான் பவுலர் ஆலன் டொனால்ட்டை பின்னுக்கு தள்ளினார் (332) ரபாடா. முதலிடத்தில் டேல் ஸ்டேய்ன் (439) நீடிக்கிறார்.