Jonny Bairstow
Jonny Bairstow icc
கிரிக்கெட்

’யார் சாமி நீ’! உலகத்தில் ஒரேயொரு பேட்ஸ்மேனாக பேர்ஸ்டோ படைத்த மோசமான சாதனை!

Rishan Vengai

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து முதல் போட்டியிலும், இந்தியா இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை 1-1 என சமன்செய்துள்ளது.

இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டியானது ராஜ்கோட்டில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா இருவரின் அசத்தலான சதத்தால் 445 ரன்களை எட்டியது.

முக்கியமான நேரத்தில் கோட்டைவிட்ட பேர்ஸ்டோ!

தங்களுடைய முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியில், தொடக்க வீரர் பென் டக்கெட் “பாஸ்பால் அட்டாக்” என்றால் என்ன என்பதை வெளிப்படுத்தினார். எதிர்கொண்ட அனைத்து பவுலர்களுக்கு எதிராகவும் காட்டடி அடித்த பென் டக்கெட், 88 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

Ben Duckett

ஒரு கட்டத்தில் 224 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் இருந்த இங்கிலாந்து அணி, எப்படியும் 400 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் ஜோ ரூட் ஒரு மோசமான ஷாட் விளையாடி வெளியேற, அடுத்து களத்திற்கு வந்த ஜானி பேர்ஸ்டோ குல்தீப் யாதவ் வீசிய 41வது ஓவரில் 4 பந்துகளை டாட் வைத்துவிட்டு 0 ரன்னில் LBW விக்கெட்டாகி வெளியேறினார்.

Root

அதற்கு பிறகு நிலைத்து நின்று 153 ரன்களில் விளையாடிய பென் டக்கெட்டும் அவுட்டாகி வெளியேற, 319 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி.

பேர்ஸ்டோ படைத்த மிக மோசமான சாதனை!

குல்தீப் வீசிய பந்தில் டக் அவுட்டில் வெளியேறிய ஜானி பேர்ஸ்டோ, இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை டக்அவுட்டாகிய வீரராக மாறி மோசமான சாதனை படைத்தார். அந்த பட்டியலில் அவருடன் இருக்கும் மற்ற வீரர்கள் அனைவருமே பவுலராக இருக்கும் நிலையில், ஒரேயொரு பேட்ஸ்மேனாக ஜானி பேர்ஸ்டோ மட்டுமே நீடிக்கிறார். அவரை தவிர வேறு எந்த நாட்டு பேட்ஸ்மேனும் அந்த பட்டியலின் அருகில் கூட இல்லை. இந்திய அணிக்கு எதிராக இப்படி ஒரு மோசமான ரெக்கார்டை வைத்திருக்கும் முதல் சர்வதேச பேட்ஸ்மேன் என்ற பெறக்கூடாத சாதனையை பேர்ஸ்டோ பெற்றுள்ளார்.

jonny bairstow

இந்தியாவிற்கு எதிராக அதிகமுறை 0 ரன்னில் வெளியேறியவர்கள்:

ஜானி பேர்ஸ்டோவ் - 8*

டேனிஷ் கனேரியா - 7

நாதன் லியோன் - 7

ஜேம்ஸ் ஆண்டர்சன் - 6

ஷேன் வார்ன் - 6

மெர்வின் தில்லன் - 6

மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணி 322 ரன்கள் முன்னிலையுடன் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்துள்ளது.