root - sachin web
கிரிக்கெட்

நியூசிலாந்தின் WTC FINAL கனவை நொறுக்கிய இங்கிலாந்து.. சச்சின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இங்கிலாந்து அணி.

Rishan Vengai

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் ஆடுகளத்தில் நடைபெற்ற நிலையில், நியூசிலாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது இங்கிலாந்து அணி.

WTC இறுதிப்போட்டிக்கு செல்ல மீதமிருக்கும் போட்டிகளை வெல்லவேண்டிய கட்டாயத்தில் இருந்த நியூசிலாந்து அணிக்கு சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி பேரிடியாக அமைந்துள்ளது.

new zealand

ஒருபுறம் ரேஸில் இலங்கையை தென்னாப்பிரிக்காவும், நியூசிலாந்தை இங்கிலாந்தும் வீழ்த்தியிருக்கும் நிலையில், தற்போது பைனலுக்கு செல்லும் போட்டியானது இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான முக்கோண போட்டியாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 23 ரன்களை அடித்திருக்கும் ஜோ ரூட், சச்சின் டெண்டுல்கரின் தனித்துவமான சாதனையை முறியடித்துள்ளார்.

சச்சின் சாதனையை முறியடித்த ரூட்..

கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 348 ரன்களும், இங்கிலாந்து 499 ரன்களும் அடித்தன.

151 பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணி 254 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது.

root

முதல் இன்னிங்ஸில் 0 ரன்னில் வெளியேறிய ஜோ ரூட், இரண்டாவது இன்னிங்ஸில் 23 ரன்கள் அடித்தார்.

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் நான்காவது இன்னிங்ஸில் 60 இன்னிங்ஸில் 1625 ரன்கள் அடித்திருக்கும் நிலையில், ஜோ ரூட் 49 இன்னிங்ஸில் 1630 ரன்கள் அடித்து முறியடித்துள்ளார்.

root - sachin

4வது இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்தவர்கள்:

* இங்கிலாந்து - ஜோ ரூட் - 49 இன்னிங்ஸ் - 1630 ரன்கள்

* இந்தியா - சச்சின் டெண்டுல்கர் - 60 இன்னிங்ஸ் - 1625 ரன்கள்

* இங்கிலாந்து - அலஸ்டர் குக் - 53 இன்னிங்ஸ் - 1611 ரன்கள்

* தென்னாப்பிரிக்கா - கிரேம் ஸ்மித் - 41 இன்னிங்ஸ் - 1611 ரன்கள்

* மேற்கிந்திய தீவுகள் - சிவனரைன் சந்தர்பால் - 49 இன்னிங்ஸ் - 1580 ரன்கள்

* இந்தியா - ராகுல் டிராவிட் - 57 இன்னிங்ஸ் - 1575 ரன்கள்