Jasprit Bumrah, india x page
கிரிக்கெட்

IND v SA TEST | பும்ராவின் புயல்வேக தாக்குதல்.. 159 ரன்களுக்கு SA ஆல் அவுட் ! 3வது வீரராக வாஷிங்டன்!

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 159 ரன்களுக்குச் சுருண்டது. முதல் இன்னிங்ஸில் பும்ரா 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

Prakash J

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 159 ரன்களுக்குச் சுருண்டது. முதல் இன்னிங்ஸில் பும்ரா 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 உள்ளிட்ட தொடர்களில் பங்கேற்று விளையாட உள்ளது. அந்த வகையில், இவ்விரு அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது. இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த தென்னாப்பிரிக்கா அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.

அந்த வகையில் தொடக்க வீரர்களான மார்க் ரம் மற்றும் ரிக்கல்டன் ஆகியோர் கொஞ்ச நேரம் நிலைத்து நின்றனர். எனினும் பும்ரா அவர்கள் இருவரையும் பிரித்தார். ரிக்கல்டன் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவரை போல்டாக்கி வெளியேற்றினார். அவரைத் தொடர்ந்து மார்க் ரம்மை 31 ரன்களில் வெளியேற்றினார். தொடர்ந்து மல்டரையும் (24) கேப்டன் பவுமாவையும் குல்தீப் யாதவ் வெளியேற்ற, மீண்டும் ஃபார்ம்க்கு வந்தார் பும்ரா. அவர் டோனி டி ஜோர்ஜியை 24 ரன்கள் எடுத்திருந்தபோது பெவிலியனுக்கு அனுப்பினார். இதற்கிடையா முகமது சிராஜ் தன் பங்கிறகு விக்கெட் கீப்பர் வெரியன்னேவையும் மார்கோ ஜேன்சனையும் அவுட்டாக்கினார்.

இடையில் அக்‌ஷர் படேல் ஒரு விக்கெட் எடுக்க, மறுபடியும் தனது புயல்வேக தாக்குதலால் கடைசி இரண்டு விக்கெட்களை வீழ்த்தி ஆட்டத்தை முடித்துவைத்தார் பும்ரா. இதனால், அந்த அணி முதல் இன்னிங்ஸில் 55 ஓவர்களில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்களையும், சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்களையும், அக்‌ஷர் படேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது. முதல்நாள் முடிவில் 20 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 ரன்களில் அவுட்டான நிலையில், கே.எல். ராகுல் 13 (59) மற்றும் வாஷிங்டன் சுந்தர் 6 (38) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.