rishabh pant, Jasprit bumrah  x page
கிரிக்கெட்

INDVSA Test| கேப்டன் பவுமாவை கிண்டல் செய்த பும்ரா.. பிரச்னையை விரும்பாத SA.. நடந்தது என்ன?

தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமாவை உடல்ரீதியாக விமர்சித்ததாக இந்திய வீரர் பும்ரா மீது குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.

Prakash J

தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமாவை உடல்ரீதியாக விமர்சித்ததாக இந்திய வீரர் பும்ரா மீது குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 உள்ளிட்ட தொடர்களில் பங்கேற்று விளையாட உள்ளது. அந்த வகையில், இவ்விரு அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது. இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த தென்னாப்பிரிக்கா அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. போட்டி தொடங்கியது முதலே, புயல்வேக தாக்குதலில் ஈடுபட்ட பும்ரா, அந்த அணியை முதல் இன்னிங்ஸில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கினார்.

jasprit bumrah

அவர், இந்த இன்னிங்ஸில் 5 விக்கெட்களை தாரைவார்த்தார். பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நாளை, இவ்வாட்டம் தொடர உள்ளது. இதற்கிடையே, தென்னாப்பிரிக்கா அணி பேட் செய்துகொண்டிருந்தது.

அவ்வணி, 62/2 என்ற நிலையில் 13வது ஓவரின் கடைசி பந்து பவுமாவின் தொடை பேடில் பட்டது. அது, LBW ஆக இருக்கும் என நினைத்து இந்திய அணி தரப்பில் நடுவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த ரிவியூ சமயத்தில், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மற்றும் பும்ரா ஆகியோர் விவாதித்தனர். அப்போது, பும்ரா கேப்டன் பவுமா குறித்து உடல்ரீதியாக விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. அவர் பேசிய வார்த்தைகள் அங்கிருந்த ஸ்டெம்ப் மைக்கில் பதிவானதாகவும் கூறப்படுகிறது.

இது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தென்னாப்பிரிக்காவின் பேட்டிங் பயிற்சியாளரான ஆஷ்வெல் பிரின்ஸ், இதைப் பெரிதுபடுத்த மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “இதில், எந்த விவாதமும் இருக்காது. இது என் கவனத்திற்கு வருவது இதுவே முதல் முறை. களத்தில் நடந்தவற்றில் எந்தப் பிரச்னையும் இருக்காது என்று நான் நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். ஆனால், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட பும்ரா, இதுகுறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.