ரஞ்சிக் கோப்பை தொடர் வரலாற்றில் முதல்முறையாக டெல்லி அணியை வீழ்த்தி ஜம்மு காஷ்மீர் அணி சாதனை படைத்துள்ளது.
91ஆவது ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதன் 'எலைட்' பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் டி பிரிவில் இடம்பெற்றுள்ள டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகளுக்கு இடையேயான போட்டி கடந்த 8ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜம்மூ காஷ்மீர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த டெல்லி அணி, முதல் இன்னிங்ஸில் 211 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஆயுஷ் தோசேஜா 65 ரன்கள் எடுத்தார். ஜம்மு காஷ்மீர் தரப்பில் அகுப் நபி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய ஜம்மு காஷ்மீர் அணி, 310 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அவ்வணியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் பி.டோக்ரா 106 ரன்கள் எடுத்தார்.
டெல்லி தரப்பில் சிமர்ஜீத் சிங் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய டெல்லி அணி 277 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் காஷ்மீர் அணிக்கு 179 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து விளையாடிய காஷ்மீர் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 179 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் கம்ரான் இக்பால் ஆட்டமிழக்காமல் 133 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் ஜம்மு - காஷ்மீர் அணி புதிய சரித்திரம் படைத்தது. கடந்த 65 ஆண்டுகளில் முதல்முறையாக டெல்லியை வீழ்த்தியது. மேலும், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வெற்றி, குரூப் Dஇல் ஜம்மு & காஷ்மீர் அணியை இரண்டாவது இடத்திற்கு உயர்த்தியது.