66 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீர் அணி ரஞ்சிக்கோப்பை வென்று வரலாற்றை மாற்றியது. கர்நாடகா அணியை வீழ்த்தி, 600 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் சாம்பியனாக அறிவிக்கப்பட்டது. இக்பால் மற்றும் சாஹில் லோரா ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.
1959-60ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சிக்கோப்பை தொடரில் முதன்முறையாக பங்கேற்ற ஜம்மு-காஷ்மீர் அணி, 66 சீசன்களாக ஒருமுறை கூட இறுதிப்போட்டியை எட்டியதில்லை. ஆனால் 66 ஆண்டுகளுக்கு பிறகு 2026 சீசனில் முதல்முறையாக ரஞ்சிக்கோப்பையின் இறுதிப்போட்டியை எட்டியிருக்கும் ஜம்மு-காஷ்மீர் அணி, பலம் வாய்ந்த கர்நாடகாவை வீழ்த்தி வரலாற்றை தலைகீழாக மாற்றியுள்ளது.
நடப்பு ரஞ்சிக்கோப்பை தொடர் முழுவதும் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் தரமான கிரிக்கெட்டை விளையாடிய ஜம்மு-காஷ்மீர் அணி, தற்போது இந்திய அணியில் விளையாடிவரும் கேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல், கருண் நாயர், பிரசித் கிருஷ்ணா, மயங்க் அகர்வால் முதலிய நட்சத்திர வீரர்கள் அடங்கிய கர்நாடகா அணியை டாமினேட் செய்து கோப்பை வென்றுள்ளது.
கர்நாடகாவில் பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 584 ரன்கள் குவித்த ஜம்மு-காஷ்மீர் அணி, கர்நாடகாவை முதல் இன்னிங்ஸில் 293 ரன்னில் சுருட்டி அசத்தியது.
இதன்மூலம் 291 ரன்கள் முன்னிலை பெற்ற ஜம்மு-காஷ்மீர் அணி 4வது நாள் ஆட்டநேர முடிவில் 477 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் முடித்தது. தொடர்ந்து கடைசி மற்றும் 5வது நாளான இன்றும் விக்கெட்டை இழக்காமல் விளையாடிய ஜம்மு-காஷ்மீர் அணி 342/4 ரன்கள் குவித்து 600 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றது. அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இக்பால் சதமடிக்க, இறுதியாக சாஹில் லோரா என்ற வீரரும் தன்னுடைய முதல் ஃபர்ஸ்ட் கிளாஸ் சதமடித்து அசத்தினார்.
இந்தசூழலில் ஜம்மு-காஷ்மீர் கேப்டன் வீரர்களை உள்ளே அழைக்க, மீதமிருக்கும் நாளில் கர்நாடகா அணியால் 600 ரன்களை அடிக்கமுடியாது என்பதால் ஆட்டம் சமனில் முடிந்தது. முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற ஜம்மு-காஷ்மீர் அணி சாம்பியனாக அறிவிக்கப்பட்டது. 1959ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட்டில் கோப்பை வெல்லவேண்டும் என கனவுகண்ட ஜம்மு-காஷ்மீர் அணி இன்று சாதித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் முதல் உமர் அப்துல்லா மைதானத்திற்கு நேரில் வந்து வெற்றியில் பங்கேற்றார். வாழ்த்துக்கள் ஜம்மு-காஷ்மீர்!