தற்போது இந்திய ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் செயல்பாடுகளைப் பார்த்தபின் பலரும் உச்சுக் கொட்டினர். என்ன ஆகப்போகிறதோ என இந்திய அணிக்காக ஆலோசனைகளையும் வழங்கினர். ஆனால், என்ன ஆனாலும், ‘என்னைத் தாண்டித்தான்..’ என தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலின் ஆட்டம் அத்தனை பேரையும் நிம்மதிப் பெருமூச்சு விடவைத்துள்ளது.
இளம்புயல்.. 22 வயதான இடதுகை ஆட்டக்காரர். 19 வயதுக்குட்பட்ட ஆட்டங்களில் ஆடியது முதல் தனது அச்சமின்மைக்கு பெயர் பெற்றவர். இதுவரை 15 டெஸ்ட் போட்டிகளில் ஆடிவிட்டார். 3 சதங்கள், 8 அரைசதங்கள் உட்பட 1568 ரன்களைக் குவித்துவிட்டார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பெர்த்தில் நடந்த இந்த ஒரு போட்டியில் மட்டும் பல சாதனைகளை வரலாற்றுப் பக்கங்களில் நிரப்பிவிட்டார்.
23 வயதினை எட்டுவதற்குள் டெஸ்டில் அதிக சதங்களை அடித்தவர்கள் பட்டியலில் ஐந்தாவது வீரராக ஜெய்ஸ்வாலும் இணைந்துள்ளார். இதுவரை 4 சதங்களை அடித்துள்ளார். அதேசமயத்தில் 23 வயதிற்குள் அதிகமுறை 150 ரன்களை விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலிலும் ஜெய்ஸ்வால் இணைந்துள்ளார். இந்த சாதனை இதுவரை சச்சின் வசம் மட்டுமே இருந்தது.
ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் சதமடித்த 23ஆவது இந்தியர்.. ஆஸ்திரேலிய மண்ணில் சதமடிப்பது என்பதே சவாலான காரியம் அதிலும், ஆஸ்திரேலியாவில் நடக்கும் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்துள்ளார் ஜெய்ஸ்வால். இதன்மூலம் ஆஸியில் நடக்கும் தனது முதல் டெஸ்ட்டில் சதமடித்த மூன்றாவது இந்தியர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
பெர்த் மைதானத்தில் சதமடித்த 5 ஆவது இந்தியர்.. பொதுவாக ஆஸ்திரேலியாவில் பேட்ஸ்மேன்களுக்கு பேக் ஃபூட் ஆட்டம் தான் செல்லுபடியாகும். முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனாலும், தனது இரண்டவாது இன்னிங்ஸில் கச்சிதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஜெய்ஸ்வால். இந்த ஆட்டம் அவரை, பேட்டர்களுக்கு சவாலான பெர்த் மைதானத்தில் ஐந்தாவது இந்திய வீரராக சதமடிக்க வைத்துள்ளது.
ஒரு வருடத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற சாதனையும் தற்போது ஜெய்ஸ்வால் வசம். 2014 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்காக பிரண்டன் மெக்கலம் 33 சிக்சர்களை டெஸ்ட் போட்டிகளில் விளாசி இருந்தார். ஆனால், தற்போது ஜெய்ஸ்வால் நடப்பாண்டில் மட்டும் 34 சிக்சர்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
அடுத்தது, கடந்த 38 ஆண்டுகளில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில் ஒரு இன்னிங்ஸில் கூட அரைசதம் அடித்தது இல்லை. ஒருவர் அரைசதம் அடிக்கும்போது மற்றவர் அவுட்டாகி இருப்பார். ஆனால், அந்த சோகம் இந்த டெஸ்ட்டில் முடிவுக்கு வந்துள்ளது. ராகுல் - ஜெய்ஸ்வால் இருவரும் அரைசதம் அடித்து அசத்தியுள்ளனர்.
ஒரு போட்டியில் ஓராயிரம் சாதனைகளை முறியடித்துள்ளார் ஜெய்ஸ்வால்.