பிசிசிஐயின் புதிய கட்டுப்பாடு விதிமுறைகளின் படி, இந்திய அணியின் சீனியர் வீரர்கள் உட்பட அனைத்து வீரர்களும் ரஞ்சிக்கோப்பை போட்டியில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, ஜடேஜா முதலிய வீரர்கள் ரஞ்சிக்கோப்பை போட்டியில் பங்கேற்று விளையாடிவருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சௌராஷ்டிரா அணிக்காக களம்கண்ட இந்திய ஸ்பின்னர் ஜடேஜா, தன்னுடைய அபாரமான பந்துவீச்சால் டெல்லி அணியை சுருட்டி எறிந்தார்.
ஆயுஸ் பதோனி தலைமையிலான டெல்லி அணியும், உனாத்கட் தலைமையிலான சௌராஷ்டிரா அணியும் இன்றைய போட்டியில் மோதின. இதில் டெல்லி அணியில் ரிஷப் பண்ட்டும், சௌராஷ்டிரா அணியில் ரவிந்திர ஜடேஜாவும் பங்கேற்று விளையாடினர்.
முதலில் விளையாடிய டெல்லி அணி ரவிந்திர ஜடேஜாவின் அசத்தலான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 188 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக ஆயுஸ் பதோனி 60 ரன்கள் அடித்தார், ரிஷப் பண்ட் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பிறகு முதல் இன்னிங்ஸில் விளையாடிய சௌராஷ்டிரா அணி 271 ரன்கள் சேர்த்தது, இதில் ஜடேஜா 36 பந்துகளுக்கு 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் உட்பட 38 ரன்கள் அடித்தார்.
83 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் களம்கண்ட டெல்லி அணியை, இந்தமுறை 94 ரன்னுக்கே சுருட்டி எறிந்தார் ஜடேஜா. 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர், மொத்தமாக 12 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரம்மிக்க வைத்தார். பண்ட் 17 ரன்னுக்கு ஜடேஜாவிடம் வீழ்ந்தார். முடிவில் சௌராஷ்டிரா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது.
டெல்லிக்கு எதிரான ரஞ்சிப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜடேஜா 7 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, தோனி ரசிகர்களின் தல ஃபார் ரீசன் என்ற டேக் லைனுடன் “Thalapathy for a reason!” என பதிவிட்டுள்ள சிஎஸ்கே அணி.