இதுவரை ஐபிஎல் அணிகள் நீக்கிய முக்கிய வீரர்கள் pt
கிரிக்கெட்

LOYALTY-க்கு வேலை இல்ல | CSK to SRH.. தூணாக நின்ற வீரர்களையே தூக்கியெறிந்த 5 அணிகள்!

2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக ஜடேஜா மற்றும் சாம்சன் இருவரின் டிரேடிங்கானது இணையத்தில் LOYALTY என்பதை பேசுபொருளாக மாற்றியுள்ளது..

Rishan Vengai

ஐபிஎல் திருவிழா எப்போதெல்லாம் தொடங்குகிறதோ அப்போதெல்லாம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களாக இருக்கும் நண்பர்கள் கூட CSK, MI, RCB, SRH, DC, PBKS, RR போன்ற ஒவ்வொரு பிரான்சைஸ் அணியின் ரசிகர்களாகவும், ஆதரவாளர்களாகவும் மாறிவிடுவார்கள்.. இப்படியான ஆதரவானது இருக்கும் இடத்தை பொறுத்தும், பிடித்த வீரர்களை பொறுத்தும் தங்களுடைய ரசிகமனப்பான்மையை ரசிகர்கள் வெளிப்படுத்துகிறார்கள்..

ஐபிஎல்

இது தொடக்கத்தில் ஆரோக்கியமான போட்டியாகவே இருந்தது, ஆனால் போகப்போக மைதானத்தில் ஒரு அணியின் ரசிகர்கள் மற்ற அணிகளின் ரசிகர்களை வசைபாடுவதும், கடுமையான சொற்களால் விமர்சிப்பதும், நண்பர்களாக இருப்பவர்கள் கூட மோதிக்கொள்வதும் என தங்கள் அணிக்கு ‘LOYAL'ஆன ரசிகர்களாக இருக்கிறோம் என்பதை நிரூபிக்க போராடுகிறார்கள்.

அணிக்கு லாயலாக இருக்கிறோம் என்பதை நிரூபிக்க பல உயிர்கள் பறிபோன சம்பவங்களும் நடந்துள்ள நிலையில், ஜடேஜா - சாம்சன் வர்த்தகத்தை தொடர்ந்து ஐபிஎல்லில் கடந்த 3 ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள், வர்த்தகங்கள் போன்றவை ‘LOYALTY' என்பதை இணையத்தில் பேசுபொருளாக மாற்றியுள்ளது..

ஹர்திக் பாண்டியா - ரோகித் சர்மா

இந்நிலையில் கோப்பை வென்று கொடுத்தபோதும் முக்கியமான வீரர்களை பிரான்சைஸ்கள் தூக்கியெறிந்த முக்கியமான சம்பவங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்..

1. வாட்டர் கேன் தூக்கிய வார்னர்.. 

ஐபிஎல் தொடரில் 2009-2013 முதல் டெல்லி அணிக்காக விளையாடிய டேவிட் வார்னர், 2014ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணியால் விலைக்கு வாங்கப்பட்டார். அதற்கு பிறகு 2014-2021 வரை சன்ரைசர்ஸ் அணியுடன் பயணித்த டேவிட் வார்னர், 2016ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாக முதல் கோப்பையை வென்றுகொடுத்தார்..

அதிலிருந்து SRH-லியிருந்து பிரிக்கவே முடியாத ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொண்ட டேவிட் வார்னர், SRH அணிக்காக ஒரு சீசனில் அதிக ரன்கள் (848 ரன்கள் - 2016 ஐபிஎல்) அடித்த வீரர், அதிகமுறை 500 ரன்களுக்கு மேல் (மொத்தம் 7முறை - தொடர்ச்சியாக 6 முறை) அடித்த வீரர், கேப்டனாக ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் (126) அடித்த வீரர், ஐபிஎல் வரலாற்றில் அதிக அரைசதங்கள் (62) அடித்த வீரர் என பல்வேறு சாதனைகளை தன்னுடைய பெயரில் எழுதினார்.. மொத்தம் 6565 ரன்கள் அடித்து ஐபிஎல் லெஜண்டாக உருவெடுத்தார்..

டேவிட் வார்னர்

ஆனால் 2021-ம் ஆண்டு ஐபிஎல்லில் 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்த பிறகு, பாதி தொடரிலிருந்து அணியில் உட்கார வைக்கப்பட்ட டேவிட் வார்னர் தன்னுடைய கேப்டன் பதவியையும் இழந்தார். தன்னுடைய அணிக்காக ட்ரிங்ஸ் மற்றும் தண்ணீர் கேன் சுமந்துசென்ற வார்னரின் நிலையை பார்த்த ரசிகர்கள் SRH நிர்வாகத்தின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இந்தசூழலில் 2021-ம் ஆண்டிற்கு பிறகு சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட டேவிட் வார்னர், SRH அணியால் சோஷியல் மீடியாவில் பிளாக் செய்யப்பட்டார். அணிக்காக கோப்பை வென்றுகொடுத்த கேப்டனாக பிரிக்கவே முடியாத இடத்திலிருந்த டேவிட் வார்னர், திடீரென பிளாக் செய்யும் நிலைக்கு சென்றது இன்றுவரை புரியாத புதிராகவே இருந்துவருகிறது.

டேவிட் வார்னர்

ஒருமுறை சன்ரைசர்ஸ் அணியால் பிளாக் செய்யப்பட்டது குறித்து பேசிய வார்னர், “அணி நிர்வாகத்தால் பிளாக் செய்யப்பட்டது என்னை அதிகமாக காயப்படுத்தியது” என்று பேசியிருந்தார்..

மேலும் சன்ரைசர்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள் (157) வீழ்த்தியவரும், ஒரே கோப்பை வென்ற 2016 ஐபிஎல் சீசனில் பர்ப்பிள் கேப் வின்னருமான (23 விக்கெட்டுகள்) வென்றவருமான புவனேஷ்குமார் நீக்கப்பட்டதும் ரசிகர்களால் மறக்கமுடியாததாக இருந்துவருகிறது.. 2016 மற்றும் 2017 என தொடர்ச்சியாக 2 முறை பர்ப்பிள் கேப்பை வென்றிருந்தார் புவனேஷ்வர் குமார்..

2. அவமதிக்கப்பட்ட ரோகித் சர்மா

ரோகித் சர்மா கேப்டனாகும் வரை மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வென்றதில்லை. சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் போன்ற ஸ்டார் வீரர்கள் அணியில் இருந்தபோதும் கூட, 2013 ஐபிஎல் தொடரின் பாதியிலிருந்து ரிக்கி பாண்டிங் கையிலிருந்து கேப்டன்சி ரோகித் சர்மாவின் கைகளுக்கு வந்துசேர்ந்தது.

அதுவரை கோப்பையே வெல்லாத மும்பை அணியை இளம்வீரர்கள் கொண்ட படையோடு பலம்வாய்ந்த சிஎஸ்கேவை இறுதிப்போட்டியில் வீழ்த்தி கோப்பைக்கு வழிநடத்தினார் ஹிட்மேன்.. அதற்குபிறகு ரோகித் சர்மா ஐபிஎல்லில் செய்து காட்டியதெல்லாம் காலத்தால் மறக்கமுடியாதது..

rohit sharma

மும்பை அணிக்காக 5 கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக ரோகித் சர்மா இருந்தபோதும், 2024 ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித்தை நீக்கியது MI நிர்வாகம். அதற்காக குஜராத் டைட்டன் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியாவை அதிக விலைகொடுத்து எடுத்துவந்து புதிய கேப்டனாக பாண்டியாவை நியமித்தது. கேப்டன்சி மாற்றம் என்பது எல்லா அணியிலும் நிகழக்கூடிய ஒன்றாக இருந்தாலும், ஒரு சாம்பியன் கேப்டனை எப்படி வெளியேற்றக்கூடாதோ அப்படியான முறையில் ரோகித்தை மும்பை அணி வெளியேற்றியது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் கோவத்தை ஏற்படுத்தியது. மற்ற ஐபிஎல் அணிகளின் ரசிகர்கள் கூட ரோகித் சர்மாவின் அதிரடி நீக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ரோகித் சர்மா 2023 ஒருநாள் உலகக்கோப்பையை வெல்லமுடியாமல் போனதும், ஹர்திக் பாண்டியா 2022 ஐபிஎல் கோப்பையை வென்றதும், 2023-ல் ரன்னர் அணியாக வந்ததும் காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் ரோகித் சர்மாவின் கேப்டன்சி நீக்கம் ரோகித் சர்மாவிடம் சொல்லப்படவில்லை என்றும், இது முழுக்க முழுக்க ரோகித்திற்கு அவமரியாதை செய்யும் செயல் என பொங்கிஎழுந்த ரோகித்தின் ரசிகர்கள், மும்பை இந்தியன்ஸ் அணியை சமூகவலைதளங்களில் UNFollow செய்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

rohit sharma

அதுமட்டுமில்லாமல் ரோகித்தின் மனைவிக்கும், மும்பை பயிற்சியாளர் மார்க் பவுச்சருக்கும் இடையே இணையத்தில் கருத்துமோதல் ஏற்பட்டது.. போதாக்குறைக்கு களத்திலும் ரோகித் சர்மாவிற்கு அவமரியாதை ஏற்பட்டதாக ரசிகர்கள் கருதி ஹர்திக் பாண்டியாவை மோசமாக விமர்சிக்க தொடங்கினர்.. அப்போதும் கணிவாக நடந்துகொண்ட ரோகித் சர்மா ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாக ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். தற்போது மும்பை அணிக்காக ஒரு வீரராக மட்டுமே ரோகித் சர்மா விளையாடிவருகிறார்..

3. கோப்பை வென்ற கையோடு நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ்..

2015-ம் ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணியால் அதிக விலைக்கு (2.6 கோடி) வாங்கப்பட்ட அன்கேப்டு வீரராக உள்ளே வந்த ஸ்ரேயாஸ் ஐயர், அறிமுக ஐபிஎல் சீசனிலேயே 439 ரன்களை குவித்து வளர்ந்துவரும் வீரருக்கான விருதை தட்டிச்சென்றார்.. அதற்குபிறகு 2019-ம் ஆண்டு டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பை எடுத்துக்கொண்ட ஸ்ரேயாஸ், ரிக்கி பாண்டிங் தலைமையில் 2019, 2020 என தொடர்ச்சியாக இரண்டு சீசன்களில் அணியை பிளேஆஃப்க்கு எடுத்துச்சென்றார்.. 2020 ஐபிஎல்லில் இறுதிப்போட்டிவரை முன்னேறிய ஸ்ரேயாஸ் ஐயரின் டெல்லி அணி தோல்வியை தழுவியது..

2021 ஐபிஎல் தொடரை காயத்தால் தவறவிட்ட ஸ்ரேயாஸ், 2022 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியால் 12.25 கோடிக்கு வாங்கப்பட்டு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.. 2023-ல் மீண்டும் காயத்தால் வெளியேறிய ஸ்ரேயாஸ், 2024 ஐபிஎல் தொடரில் மீண்டும் கொல்கத்தா அணியின் கேப்டனாக அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்..

kkr

இனி ஸ்ரேயாஸ் தலைமையில் கொல்கத்தா அணி வலுவான அணியாக உருவாகும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், அதிர்ச்சிக்குரிய வகையில் 2025 ஐபிஎல் ஏலத்தில் அணியிலிருந்து வெளியேற்றியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.. ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கத்திற்காக பலகாரணங்கள் சொல்லப்பட்டாலும், கோப்பை வென்ற கேப்டனுக்கான மரியாதை அளிக்கப்படவில்லை என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது.. ஒரு ஐபிஎல் பிரான்சைஸ் அணிக்கு கோப்பை வென்றுகொடுத்த கேப்டனாக இருந்தபோதும் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டது இன்னும் நம்பமுடியாததாகவே இருந்துவருகிறது..

shreyas pbks

பஞ்சாப் கிங்ஸ் அணியால் 26.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், கேப்டனாக பஞ்சாப் அணியை 10 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு வழிநடத்தி சாதனை படைத்தார்..

4. நீக்கப்பட்ட சாஹல், கிறிஸ் கெய்ல்!

ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர்களாக இருந்தவர்கள் கிறிஸ் கெய்ல் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் இருவரும், இதுவரை இந்த இரண்டு வீரர்கள் எதற்காக ஆர்சிபி அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்பது புரியாத புதிராகவே இருந்துவருகிறது..

Chris Gayle

2011-2017 வரை ஆர்சிபி அணிக்காக விளையாடிய அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல், ஆர்சிபிக்காக அறிமுகமான போட்டியிலேயே 102 ரன்கள் விளாசி நாட் அவுட்டில் முடித்து மிரட்டினார்.. தொடர்ந்து ஆர்சிபிக்காக 43 சராசரி 152 ஸ்டிரைக்ரேட்டுடன் 3163 ரன்கள் அடித்த கிறிஸ்கெய்ல் 5 சதங்களும், 10 அரைசதங்களும் அடித்து அசத்தினார்.. மேலும் ஆர்சிபிக்காக 30 பந்தில் டி20 சதம் மற்றும் ஒரு டி20 இன்னிங்ஸில் 175 ரன்கள் என்ற இரண்டு மாபெரும் சாதனைகளையும் படைத்துள்ளார்..

yuzvendra chahal

யுஸ்வேந்திர சாஹலை பொறுத்தவரையில், ஆர்சிபி அணியின் கேம் சேஞ்சர் பவுலராக வலம்வந்தவர்.. பெங்களூரு அணிக்காக 113 போட்டிகளில் விளையாடி 139 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் சாஹல், ஆர்சிபிக்காக இரண்டு பிளே ஆஃப் மற்றும் ஒரு இறுதிப்போட்டியில் விளையாடி உள்ளார். சின்னசாமி போன்ற சிறிய மைதானத்தில் ஆட்டத்தையே மாற்றக்கூடிய பவுலராக வலம்வந்த சாஹலை எதற்காக ஆர்சிபி அணி வெளியேற்றியது என்பது இன்னும் தெளிவுபெறாத கேள்வியாகவே இருந்துவருகிறது..

Mohammed Siraj

இவர்கள் இருவரை கடந்து ஆர்சிபியின் சொத்தாக வலம்வந்தவர் முகமது சிராஜ், கடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு சிராஜ் தன்னுடைய எமோசனை வெளிப்படுத்தியிருந்தார்..

5. சிஎஸ்கேவின் தூணாக இருந்த ஜடேஜா

ஐபிஎல்லில் சமீபத்திய பேசுபொருளாக ஜடேஜா மற்றும் சஞ்சு சாம்சனின் வர்த்தகம் இருந்துவருகிறது.. சென்னை அணியின் நட்சத்திர நாயகனாக வலம்வந்த ஜடேஜாவை வெளியேற்ற துணிந்திருக்கும் சிஎஸ்கேவின் நகர்வு சென்னை ரசிகர்களையே அதிர்ச்சியில் தள்ளியுள்ளது..

2012 முதல் சென்னை அணியின் தூணாக இருந்துவரும் ஜடேஜா, பவுலர், ஃபீல்டர், ஃபினிசர் என 3 விதமான பங்களிப்பையும் கொடுத்து தசாப்தமாக சிஎஸ்கேவை தன்னுடைய தோளில் சுமந்துள்ளார்..

ஜடேஜா வெளியேறினால் சிஎஸ்கேவில் உருவாகும் 8 பிரச்னைகள்

சிஎஸ்கே அணிக்காக அதிக ஐபிஎல் விக்கெட்டுகள் வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா, முதலிடத்திலிருந்து டிவைன் பிராவோவின் (140 விக்கெட்டுகள்) சாதனையை முறியடித்தார். மேலும் சென்னை அணிக்காக பேட்டிங்கிலும் 2000 ரன்களை பூர்த்தி செய்தார்.

2012 முதல் சென்னை அணிக்காக விளையாடிவரும் ஜடேஜா, 2018, 2021 மற்றும் 2023 ஐபில் கோப்பைகளை வென்ற சென்னை அணியில் இடம்பிடித்துள்ளார்.. 2023 ஐபிஎல் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் எல்லாமே கைவிட்டுப்போனபிறகு கடைசி இரண்டு பந்தில் சிக்சர், பவுண்டரி என விரட்டி கோப்பை வென்றுகொடுத்த ஜடேஜா மறக்கமுடியாத ஒரு வெற்றியை சென்னை ரசிகர்களுக்கு விருந்தாக்கினார்.. சென்னை அணிக்காக ஒரு ஜாம்பவானாக இருந்துவரும் ஜடேஜாவை, அணியிலிருந்து வெளியேற்ற துணிந்துவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..

MS Dhoni-Ravindra Jadeja

அதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 100 போட்டிகளுக்கு மேல் விளையாடி 4000 ரன்களுக்கு மேல் அடித்திருக்கும் சஞ்சு சாம்சன், கேப்டனாகவும் RR அணிக்கு அதிகவெற்றிகளை குவித்து ஷேன் வார்னேவின் சாதனையை முறியடித்துள்ளார்.. 2008-க்கு பிறகு 12 வருடங்களுக்கு ராஜஸ்தான் அணியை 2022 ஐபிஎல் ஃபைனல் வரை எடுத்துச்சென்றார்.. சிறந்த ஃபார்மில் இருந்துவரும் சஞ்சு சாம்சன் 2024 ஐபிஎல் தொடரில் 48 சராசரியுடன் 531 ரன்களை விளாசியிருந்தார்.. இப்படி ராஜஸ்தான் அணியின் ஜாம்பவான் கேப்டனாகவும், வீரராகவும் இருந்தபோதிலும் சஞ்சு சாம்சனை ஓரங்கட்டியுள்ளது ராஜஸ்தான் அணி..

இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 7 ஐபிஎல் சதங்கள் அடித்து, ஒரே சீசனில் 863 ரன்கள் குவித்து, 3000 ரன்களை கடந்திருந்த ஜோஸ் பட்லரை வெளியேற்றிய சம்பவம் எதற்கு நடந்தது என்பதே புரியாமல் இருந்துவருகிறது..

சஞ்சு சாம்சன், ஜடேஜா

இந்த சம்பவங்களை எல்லாம் வைத்து பார்க்கும்போது ஐபிஎல் தொடரானது முழுக்க முழுக்க வணிகம் மற்றும் அணியின் பிராண்ட் மதிப்பை மட்டுமே சார்ந்து இருக்கிறது.. இதில் எந்த பிரான்சைஸ் அணியிலும் விஸ்வாசம் - லாயல்டி என்ற வார்த்தைக்கு இடமே இல்லை என்பதுதான் நிதர்சனம்.. ரசிகர்கள் மட்டுமே இங்கு லாயலாக இருந்துவரும் நிலையில், மாறவேண்டிய இடத்தில் ரசிகர்கள் மட்டுமே இருக்கின்றனர்.. இதுவொரு விளையாட்டு என்பதை கடந்து தனிப்பட்ட முறையில் எடுத்துகொள்வது தேவையற்றது என்பதை ரசிகர்கள் விவாதமாக வைத்துவருகின்றனர்..