ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு திரும்பியுள்ள ரவீந்திர ஜடேஜா, இந்த அணியை வீடாகக் கருதுகிறார். 2008 ஐபிஎல் தொடரின் முதல் கோப்பையை ராஜஸ்தானுடன் வென்ற ஜடேஜா, தற்போது மீண்டும் அந்த அணியில் இணைந்துள்ளார். அவரது வருகை குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் டைரக்டர் குமார் சங்ககரா மகிழ்ச்சி தெரிவித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்தவீரரும், நட்சத்திர ஆல்ரவுண்டருமான ரவீந்திர ஜடேஜா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளார்.. ஜடேஜாவிற்கு மாற்றாக சஞ்சு சாம்சனை வர்த்தகம் செய்துள்ளதாக சிஎஸ்கே அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2012 முதல் சென்னை அணிக்காக விளையாடிவந்த ரவீந்திர ஜடேஜா 2018, 2021 மற்றும் 2023 ஐபிஎல் கோப்பைகளை வென்றபோது சிஎஸ்கே அணியில் அங்கம் வகித்தார். 2023 ஐபிஎல்லின் இறுதிபோட்டியில் கடைசி 2 பந்துக்கு சிக்சர், பவுண்டரி அடித்து சிஎஸ்கே அணி 5வது கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்..
இந்நிலையில் ஐபிஎல்லில் தன்னுடைய முதல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு தற்போது திரும்பியுள்ளார் ஜடேஜா. இந்தசூழலில் ராஜஸ்தான் அணிக்கு திரும்புவது சிறப்பானது என்றும், RR எனக்கு வெறும் அணி மட்டுமல்ல வீடு என்றும் ஜடேஜா கூறியுள்ளார்..
2008 ஐபிஎல் தொடரின் முதல் கோப்பையை ஷேன் வார்னே தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றபோது ஜடேஜாவும் அணியில் இருந்தார்.. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு ராஜஸ்தான் அணிக்கு திரும்பியுள்ளார் ஜடேஜா..
இந்நிலையில் ராஜஸ்தான் அணிக்கு திரும்பியுள்ளது குறித்து பேசியிருக்கும் ரவீந்திர ஜடேஜா, “ஐபிஎல்லில் எனக்கு முதல் தளத்தை அமைத்து கொடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான், இங்கு திரும்ப வருவது சிறப்பு வாய்ந்தது, இது எனக்கு வெறும் அணி மட்டுமல்ல வீடு, என்னுடைய முதல் ஐபிஎல் கோப்பையை ராஜஸ்தான் அணியில் தான் வென்றேன், இந்த அணிக்காக மேலும் கோப்பையை வெல்ல விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.
ஜடேஜாவின் வருகை குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் டைரக்டர் குமார் சங்ககரா, “ராயல்ஸ் அணிக்கு ஜடேஜா திரும்பிவருவது நம் அனைவருக்கும் நம்பமுடியாத அளவிற்கு சிறப்பு வாய்ந்தது. பல ஆண்டுகளாக, அவர் ஒவ்வொரு துறையிலும் செல்வாக்கு செலுத்தக்கூடிய வீரராக வளர்ந்துள்ளார். அவரது அனுபவம், அமைதி மற்றும் போட்டித்திறன் ஆகியவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மகத்தான மதிப்பை சேர்க்கும்” என்று கூறியுள்ளார்.