டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் படைத்த பிரத்யேக சாதனை பட்டியலில் தோனி வரிசையில் இணைந்துள்ளார் ரவீந்திர ஜடேஜா.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், இந்திய அணியின் துணை கேப்டன் ரவீந்திர ஜடேஜா பிரத்யேக சாதனை பட்டியலில் எம் எஸ் தோனியுடன் இணைந்துள்ளார்.
பரபரப்பாக தொடங்கப்பட்ட முதல் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளும், பும்ரா 3 விக்கெட்டுகளும் வீழ்த்த 162 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்.
விண்டீஸை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிவரும் இந்திய அணியில், தொடக்க வீரர் கேஎல் ராகுல் 12 பவுண்டரிகள் உதவியுடன் தன்னுடைய 11வது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்து அசத்தினார். சொந்த மண்ணில் அவருடைய இரண்டாவது டெஸ்ட் சதம் இதுவாகும். கில் 50 ரன்களை அடித்து வெளியேற, அதற்குபிறகு கைக்கோர்த்து விளையாடிவரும் ஜடேஜா மற்றும் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் இருவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி விளையாடிவருகின்றனர்.
6வது வீரராக களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகளை விளாசி அரைசதத்தை பதிவுசெய்தார். இதன்மூலம் பிரத்யேக சாதனை பட்டியலில் தோனியுடன் இணைந்துள்ளார் ஜடேஜா.
தோனி உடன் இணைந்த ஜடேஜா:
டெஸ்ட் கிரிக்கெட்டில் அரைசதத்திற்குள் 4 சிக்சர்களை விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் தோனி, ரிஷப் பண்ட், வாசிங்டன் சுந்தருக்கு பிறகு 4வது வீரராக ரவீந்திர ஜடேஜா இணைந்துள்ளார்.
1. தோனி vs வங்கதேசம் - மிர்பூர் - 2007
2. ரிஷப் பண்ட் vs இங்கிலாந்து - சென்னை - 2021
3. வாசிங்டன் சுந்தர் vs இங்கிலாந்து - ஓவல் - 2025
4. ரவீந்திர ஜடேஜா vs வெஸ்ட் இண்டீஸ் - அகமதாபாத் - 2025