sanju samson - ishan kishan web
கிரிக்கெட்

ஒரே இரவில் உடைந்த சஞ்சு சாம்சன் கனவு.. உலகக்கோப்பை Playing 11-ல் இடம் இல்லையா..?

சொந்த மண்ணில் நடந்த டி20 போட்டியில் ஓரிலக்க ரன்னில் அவுட்டாகி வெளியேறிய சஞ்சு சாம்சனுக்கு உலகக்கோப்பை கனவும் சிதைந்துவிட்டதாக பார்க்கப்படுகிறது..

Rishan Vengai

சஞ்சு சாம்சனின் சொந்த மண்ணில் கம்பேக் என்ற எதிர்பார்ப்புகள் முறியடிக்கப்பட்டன. கேரளாவில் நடந்த போட்டியில், சஞ்சு சாம்சன் 6 ரன்னில் வெளியேறியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இஷான் கிஷன் சதமடித்து மிரட்டிய நிலையில், சஞ்சுவின் உலகக்கோப்பை வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

அந்த மாலைப்பொழுது சஞ்சு சாம்சனுக்காகவே பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டிருந்தது. இந்திய அணிக்காக அறிமுகமாகி 56 டி20 போட்டிகளில் விளையாடியிருந்தாலும் தன்னுடைய சொந்தமண்ணில் ஒருமுறை கூட சஞ்சு சாம்சன் விளையாடியதில்லை. அதனால் கேரளாவில் முதல் போட்டியில் விளையாடவந்த சஞ்சு சாம்சனை வரவேற்க மிக உயரமான கட் அவுட்கள் வைக்கப்பட்டன, அதேபோல சேட்டனை செலப்ரேட் செய்ய டிக்கெட் விற்பனை திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே போட்டியின் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தன.

சஞ்சு சாம்சன்

இதுஒருபுறம் இருக்க சஞ்சு சாம்சனின் போட்டியாளரான இஷான் கிஷன், அணியிலிருக்கும் அனைவருக்கும் சஞ்சு சாம்சன் தன்னுடைய ஃபார்மிற்கு திரும்பவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அவருடைய ஃபார்ம் உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு தேவையானது என்று கூறினார். அதேபோல இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், விமான நிலையத்திலிருந்து வரும்போது ‘வழி விடுங்க, சேட்டனை டிஸ்டர்ப் பண்ணாதீங்க’ என விஐபி வரவேற்பளித்து உற்சாகப்படுத்தினார்.

சஞ்சு சாம்சனை கேரளாவில் கலாய்த்த சூர்யகுமார் யாதவ்

கால்பந்துக்கு பெயர்போன கேரளாவில் இருந்து இந்திய கிரிக்கெட் அணிக்காக பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்கள் சொற்பம் என்பதால், சஞ்சு சாம்சனின் கம்பேக்கை காண ஒட்டுமொத்த கேரளாவும் எதிர்ப்பார்ப்பில் இருந்தது. ரசிகர்கள், சக வீரர்கள் என அனைவரும் எதிர்ப்பார்த்திருக்க 6 ரன்னில் வெளியேறிய சஞ்சு சாம்சன் அனைத்துவித எதிர்ப்பார்ப்புகளையும் சுக்குநூறாக நொறுக்கி ஏமாற்றினார்.

இப்படியான சூழலில் தான் சொந்த மண்ணில் சஞ்சு சாம்சன் சொதப்ப, மறுமுனையில் தன்னுடைய போட்டியாளரான இஷான் கிஷன் சதமடித்து மிரட்டியுள்ளார். சஞ்சு சாம்சனுக்காக ஒதுக்கப்பட்ட இரவில், இஷான் கிஷன் ஹீரோவாக உருவெடுத்துள்ளார்.

இந்தசூழலில் நடந்துமுடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெறும் 46 ரன்கள் மட்டுமே அடித்திருக்கும் சஞ்சு சாம்சனுக்கு இனி இந்திய உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சஞ்சு சாம்சன்

காயத்திலிருந்து மீண்டுவந்திருக்கும் திலக்வர்மா தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி போட்டிக்கு திரும்பிவிடுவார் என்ற நிலையில், அவருக்கான இடத்தை சஞ்சுவா அல்லது இஷானா? யார் விட்டுக்கொடுப்பார்கள் என்ற கேள்விக்கு சஞ்சு சாம்சன் தான் என்பதாக உள்ளது. இந்த முடிவை ‘சஞ்சுவுக்கு நீதிவேண்டும்’ என குரல் எழுப்பிய ரசிகர்களும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.

இஷான் கிஷன்

ஆனால் ஒரு வீரர் மீது நம்பிக்கை வைத்தால், அவரை எப்போதும் பேக்கப் செய்யும் கவுதம் கம்பீர், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்குவாரா? அல்லது 2024 டி20 உலகக்கோப்பையில் தன்னுடைய இடத்தை ரிஷப் பண்டிற்கு விட்டுக்கொடுத்து பெஞ்சில் அமர்ந்த சஞ்சு சாம்சன், இம்முறை இஷான் கிஷனிடம் தன் இடத்தை பறிகொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.